Home தேர்தல்-14 “மகாதீர் தாக்கத்தால் சுங்கை பூலோவில் மலாய் வாக்காளர்களின் ஆதரவு பெருகுகிறது” சிவராசா கூறுகிறார்.

“மகாதீர் தாக்கத்தால் சுங்கை பூலோவில் மலாய் வாக்காளர்களின் ஆதரவு பெருகுகிறது” சிவராசா கூறுகிறார்.

1079
0
SHARE
Ad

சுங்கை பூலோ – நாடு முழுவதும் சூறாவளிச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் பக்காத்தான் கூட்டணியின் தலைவர் துன் மகாதீர், சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதிக்குள் இன்னும் வரவில்லை என்றாலும், அவரது பிரச்சாரத்தின் தாக்கம் சுங்கை பூலோ நாடாளுமன்றத்திலுள்ள மலாய் வாக்காளர்களிடையே ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பதாகவும், அது தனக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியிருப்பதாகவும் பக்காத்தான் கூட்டணி சார்பில் இந்தத் தொகுதியில் போட்டியிடும் ஆர்.சிவராசா கூறுகிறார்.

சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் தான் மேற்கொண்டு வரும் பிரச்சாரங்கள் குறித்து செல்லியல் ஊடகத்திடம் தொடர்பு கொண்டு விவரித்த சிவராசா, “மகாதீரின் பிரச்சாரத்தின் தாக்கத்தை உணர முடிகிறது. காரணம் தொகுதி சீர்திருத்தங்களின் காரணமாக, முன்பு சுபாங் ஜெயா என்றிருந்த இந்தத் தொகுதி தற்போது சுங்கை பூலோ எனப் பெயர் மாற்றம் கண்டிருப்பதோடு, 66 விழுக்காடு மலாய் வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாகவும் உருமாறியிருக்கிறது.

எனினும் இங்கு மீண்டும் பிகேஆர் சார்பாக சிவராசா பக்காத்தான் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். சுங்கை பூலோவில் ஏற்பட்டிருக்கும் நான்கு முனைப் போட்டியில் தேசிய முன்னணியின் சார்பில் மஇகாவின் பிரகாஷ் ராவ், பிஎஸ்எம் கட்சியின் சார்பில் சைனுர்ரிசாமான் பின் மொஹாராம், பாஸ் கட்சியின் சார்பில் நுரிடா பிந்தி முகமட் சாலே ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பாஸ் – பிஎஸ்எம் கட்சிகளால் வாக்குகள் பிளவுபடுமா?

#TamilSchoolmychoice

கடந்த 2013 பொதுத் தேர்தலில் பக்காத்தான் கூட்டணியில் இருந்த காரணத்தால் சிவராசாவுக்கு ஆதரவு தெரிவித்த பாஸ் கட்சி, பிஎஸ்எம் கட்சி ஆகிய கட்சிகளின் ஆதரவு இந்த முறை இல்லாதது, அந்தக் கட்சிகளின் வேட்பாளர்களே தன்னை எதிர்த்துப் போட்டியிடுவது, மேலும் 66 விழுக்காடாக இருக்கும் மலாய் வாக்காளர்கள் – ஆகிய அம்சங்களின் காரணமாக, இந்த முறை சிவராசாவுக்கு கடும் போட்டி ஏற்பட்டிருப்பதாகக் தொகுதி நிலவர கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பதிலளித்த சிவராசா “இத்தகையப் பிரச்சாரங்களை நானும் உணர்ந்திருக்கிறேன். ஆனால் உண்மை நிலவரம் அதுவல்ல! இந்த முறை தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்லும் மலேசிய வாக்காளர்களின் முன் நிற்பது ஜிஎஸ்டியால் விலைவாசி உயர்வு, 1எம்டிபி, ஆகிய விவகாரங்கள்தான். இதன் காரணமாக உண்மையான போட்டி பக்காத்தானுக்கும் தேசிய முன்னணிக்கும்தான். வாக்காளர்கள் ஒன்று மாற்றத்திற்காக எங்களுக்கு வாக்களிப்பார்கள். அல்லது நஜிப் ஆட்சி தொடர்வதற்காக, தேசிய முன்னணிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள். மற்றபடி தங்களின் வாக்குகளை வீணாக்க அவர்கள் விரும்ப மாட்டார்கள். பாஸ் கட்சிக்கோ, பிஎஸ்எம் கட்சிக்கோ வாக்களிப்பவர்கள், வெகு சொற்பமாகவே இருப்பார்கள். எனவே, வாக்குகள் பிளவுபட்டாலும் அது மிகவும் குறைவாகவே இருக்கும் அதனால், பக்காத்தான் கூட்டணியின் வாக்கு வங்கியில் பாதிப்பு ஏதும் ஏற்படாது” என்றும் கூறினார்.

2013-இல் வராத வாக்குகள் இப்போது பக்காத்தானுக்குத் திரும்புகின்றன

“கடந்த 2008 மற்றும் 2013-இல் சில மலாய் வாக்காளர் பகுதிகளில் எங்களுக்கு வாக்குகள் விழவில்லை. ஆனால், இந்த முறை அந்தப் பகுதிகளில் கூட எங்களுக்கு ஆதரவாக மலாய் வாக்காளர்கள் திரும்பியுள்ளதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். துன் மகாதீர் – அன்வார் இப்ராகிம் இணைந்த கூட்டணியால் இது சாத்தியமாகியுள்ளது என்று கருதுகிறேன்” என்றும் சிவராசா மேலும் கூறினார்.

தொகுதி மக்களைச் சந்திப்பதில்லையா?

இரண்டு தவணைகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் தொகுதி வாக்காளர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கண்டறிவதில்லை – அவற்றுக்குத் தீர்வு காண்பதில்லை – என்ற குறைகூறல்கள் தொகுதியில் இருப்பதாகக் கூறப்படுவது குறித்தும் கருத்துரைத்த சிவராசா “இதுவும் தவறான, எனக்கு எதிரான பிரச்சாரம். எனக்கான சேவை மையம் கோத்தா டாமன்சாரா செக்‌ஷன் 8 பகுதியில் செயல்படுகிறது. அங்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் தவறாமல் வருகை தந்து மக்களின் குறைகளை எப்போதும் கேட்டு தீர்வு காண்பேன். எனக்கு உடல்நலம் இல்லாத நாட்களிலும், வெளிநாடுகளில் இருக்கும் நாட்களிலும்தான் அங்கு செல்ல மாட்டேன். மற்றபடி ஒவ்வொரு வியாழக்கிழமையும் அங்கு செல்வேன். அங்கு முழுநேர அலுவலர் ஒருவரும் செயல்படுகிறார். அவரையும் தொகுதி வாக்காளர்கள் அணுகி பிரச்சனைகளைக் கூறலாம். எனவே நான் தொகுதிக்குச் செல்வதில்லை, கவனிப்பதில்லை என்பதும் எனக்கு எதிரான தவறான பிரச்சாரம்” என்று கூறினார்.