Home தேர்தல்-14 பத்து நாடாளுமன்றம்: தியான் சுவா-பிரபாகரன் இணை புதிய வரலாறு படைப்பார்களா?

பத்து நாடாளுமன்றம்: தியான் சுவா-பிரபாகரன் இணை புதிய வரலாறு படைப்பார்களா?

1250
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியப் பொதுத் தேர்தல்களில் இதற்குமுன் இப்படி நிகழ்ந்ததில்லை என்னும் அளவுக்கு ஒரு புதுமையான – வித்தியாசமான அரசியல் சம்பவம் கூட்டரசுப் பிரதேசத்தில் உள்ள பத்து நாடாளுமன்றத்தில் அரங்கேறி வருகிறது.

பத்து நாடாளுமன்றத்தில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்ய முன்வந்த பக்காத்தான் ஹரப்பான்-பிகேஆர் வேட்பாளர் தியான் சுவாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட, அதன் பின்னர் வழக்கு தொடுக்கப்பட்டு, அந்த வழக்கும் நிராகரிக்கப்பட்டது.

பத்து நாடாளுமன்றத் தொகுதியில் எங்கும் காணப்படும் தியான் சுவா-பிரபாகரன் இணைந்த பதாகைகள்

இதனைத் தொடர்ந்து அங்கு சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் 22 வயதே நிரம்பிய பிரபாகரனை பக்காத்தான் கூட்டணி வேட்பாளராக அங்கீகரித்து அவருடன் தொகுதி முழுவதும் சென்று அவருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்து வருகிறார் தியான் சுவா.

#TamilSchoolmychoice

இதற்கு முன் இவ்வாறு நடந்ததில்லை என்பதோடு, இதன் மூலம் பிரபாகரன் பத்து தொகுதியில் வெற்றியடைந்தால் இரண்டு முக்கிய வரலாற்றுப் பதிவுகள் இந்தப் பொதுத் தேர்தலில் தோற்றுவிக்கப்படும்.

மிக இளம் வயது நாடாளுமன்ற உறுப்பினர்

பிரபாகரன் – பத்து நாடாளுமன்றத் தொகுதி சுயேச்சை வேட்பாளர்

14-வது பொதுத் தேர்தலில் போட்டியிடும் மிக இளம் வயது வேட்பாளர் என்ற சாதனையைத் தற்போது நிகழ்த்தியுள்ள பிரபாகரன், பத்து தொகுதியில் வென்றால், 14-வது பொதுத் தேர்தலின் வழி நாடாளுமன்றத்தில் நுழையும் மிக இளம் வயது மலேசியர் என்ற பெருமையைப் பெறுவார்.

அதுமட்டுமல்ல மலேசிய வரலாற்றில் இதற்கு முன் இந்த வயதில் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யாருமில்லை என்பதால் 22-வது வயதில் நாடாளுமன்றத்தில் நுழையும் முதல் மலேசியர் என்ற சாதனையையும் அவர் புரிவார்.

நேற்று உலு கிளாங்கில் மகாதீருடன் பிரபாகரன் (படம்: நன்றி-பிரபாகரன் முகநூல்)

22 வயதில் மலேசிய நாடாளுமன்றத்திற்கு இதுவரை யாரும் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை என புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

ஜசெகவின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான லீ லாம் தை 1969-இல் கோலாலம்பூரிலுள்ள புக்கிட் நானாஸ் சட்டமன்றத்திற்குப் போட்டியிட்டு தனது 23-வது வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மிக இளவயதில் தேர்தலில் போட்டியிட்டு வென்றவராகக் கருதப்படுகிறார். ஆனால் அது சட்டமன்றமாகும்.

அது மட்டுமல்ல!

மேற்கு மலேசியாவில் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டு சுயேச்சையாக வென்றவர்கள் அண்மையக் காலத்தில் நினைவு தெரிந்து யாருமில்லை.

சபா, சரவாக் மாநிலங்களில் நிறைய பேர் சுயேச்சையாகப் போட்டியிட்டு சட்டமன்றம், நாடாளுமன்றம் தொகுதிகளில் வெல்வது வழக்கம்.

அந்த வகையில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு தீபகற்ப மலேசியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பிரபாகரன் திகழுவார்.

பொதுத் தேர்தலில் மிக முதிர்ந்த வேட்பாளரும், மிக இளம் வயது வேட்பாளரும் ஒரே மேடையில்…

பக்காத்தான் கூட்டணியும் பிரபாகரனுக்கு ஆதரவு தந்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (6 மே) சிலாங்கூரில் உள்ள உலு கிளாங் பகுதியில் நடைபெற்ற மாபெரும் பக்காத்தான் பேரணியில் துன் மகாதீர் பிரபாகரனை மேடைக்கு அழைத்து பக்காத்தான் கூட்டணி அவருக்கு ஆதரவளிக்கும் என்றும் அறிவித்திருக்கிறார்.

மகாதீருடன் ஒரே மேடையில் தோன்றும் வாய்ப்பும் பிரபாகரனுக்குக் கிடைத்திருக்கிறது.

இதுவும் ஒரு புதுமைதான்!

காரணம், 14-வது பொதுத் தேர்தலில் போட்டியிடும் மிக முதிர்ந்த வயது கொண்ட வேட்பாளர் துன் மகாதீர் – மிக இளம் வயது வேட்பாளர் பிரபாகரன் – இருவரும் ஒரே மேடையில் தோன்றும் புதுமையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை அரங்கேறியிருக்கிறது.

தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டாலும், ஒரு தொகுதியைக்கூட பக்காத்தான் கூட்டணி இந்தப் பொதுத் தேர்தலில் இழந்து விடக் கூடாது, என்ற நல்லெண்ணத்துடன் இன்னொரு இளம் வயது இந்திய வேட்பாளருக்காக வீதி வீதியாகப் பிரச்சாரம் செய்து வரும் தியான் சுவாவும் பத்து தொகுதியின் வாக்காளர்கள் மத்தியில் மதிப்பால் உயர்ந்து நிற்கிறார்.

-இரா.முத்தரசன்