Home தேர்தல்-14 “நஜிப் தலைமறைவானால் இண்டர்போல் உதவியுடன் கைது செய்வோம்” – மகாதீர் கருத்து!

“நஜிப் தலைமறைவானால் இண்டர்போல் உதவியுடன் கைது செய்வோம்” – மகாதீர் கருத்து!

1608
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில், தேசிய முன்னணி தோல்வியுற்று, பக்காத்தான் ஆட்சியமைக்கும் போது, பராமரிப்புப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும் அவரது குடும்பத்தினரும் நாட்டைவிட்டு வெளியேறி தலைமறைவாகிவிட வாய்ப்பு இருப்பதாக பக்காத்தான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

எனினும், பக்காத்தான் தலைமையிலான புதிய அரசாங்கம், இண்டர்போல் உள்ளிட்ட வெளிநாட்டு அதிகாரிகளின் உதவியை நாடி அவர்களைத் தேடிப் பிடிக்கும் என்றும் மகாதீர் குறிப்பிட்டிருக்கிறார்.

“நான் சட்டத்தை நம்புகிறேன். சிலருக்கு மட்டும் சகல கௌரவங்கள் தரப்படுவதை நான் நம்புவதில்லை. அவர் (நஜிப்) சட்டத்தை மீறினால், சட்டம் அவரைக் கண்டுபிடித்து கைது செய்யும்” என மகாதீர் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

“நமக்கு இன்று இண்டர்போல் போன்ற வசதிகள் இருக்கின்றன. அவர் குற்றவாளி என்பதை சட்டம் உறுதிப்படுத்தினால், என்னை நம்புங்கள்.. முறையான ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில், இன்னும் அதிகமானோர் இந்த விவகாரத்தில் ஆதாரத்தைக் கொடுக்கும் பட்சத்தில்” என மகாதீர் 1எம்டிபி விவகாரத்தில் நஜிப் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கருத்துத் தெரிவித்தார்.

மேலும், இது நஜிப்புக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என்றும், சட்டத்தை மீறியவர்கள் முன்னாள் பிரதமராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மகாதீர் தெரிவித்தார்.

“ஒருவேளை அவருக்கு தான் சட்டத்தை மீறிவிட்டோம் எனத் தெரிந்திருக்கலாம். அவர் பயப்படுவதற்கு காரணங்கள் இருக்கின்றன. காரணம் அவர் நீதிமன்றம் சென்றால் குற்றம் நிரூபிக்கப்படும் என்பதால் அதற்கு முன்பாக அவர் செல்ல வேண்டும்.

“மேலும், குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் சிறை செல்ல வேண்டும். அவர் அதை விரும்பவில்லை” என்றும் மகாதீர் தெரிவித்திருக்கிறார்.

வரும் மே 9-ம் தேதி புதன்கிழமை 14-வது பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பக்காத்தான் ஹராப்பான் சார்பில் மகாதீர் கடுமையான விமர்சனங்களோடு நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.