Home தேர்தல்-14 தேர்தல்-14: அன்வாரின் செய்தி: “பிரச்சனைகளுக்குத் தீர்வு காண மகாதீருக்கு கைகொடுப்போம்”

தேர்தல்-14: அன்வாரின் செய்தி: “பிரச்சனைகளுக்குத் தீர்வு காண மகாதீருக்கு கைகொடுப்போம்”

1008
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பொதுத் தேர்தலில் வாக்களிக்கச் செல்லும் மலேசியர்களுக்கு சிறைவாசம் அனுபவித்து வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது செய்தி ஒன்றை வழங்கியுள்ளார்.

“பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைவர் துன் மகாதீருக்கு, நாட்டில் நிலவும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் அவரது முயற்சிகளுக்கு அனைவரும் ஆதரவு கொடுப்போம்” என்பதுதான் அந்த செய்தி.

தனது தோள்பட்டையில் மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சையின் காரணமாகத் தற்போது செராஸ் மறுசீரமைப்பு சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வரும் அன்வார், “சிறைக் காவலர்களின் கடுமையான மேற்பார்வையின் கீழ் இந்த செய்தியை வழங்குகிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஆரம்பத்தில் தனது குடும்பத்தினர் துன் மகாதீருடன் இணைந்து பணியாற்றுவதில் தயக்கம் கொண்டாலும், நாளடைவில் நாட்டின் நலனை முன்னிறுத்தி மகாதீருடன் இணைய முடிவு செய்ததாகக் கூறியுள்ளார்.

“நமது போராட்டத்திற்காக மகாதீர் கொண்டிருக்கும் உறுதி, தனது கடந்த கால தவறுகளை ஒப்புக் கொண்டது, மன்னிப்பும் கேட்டது, தனது நேரத்தையும் ஆற்றலையும், மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் தியாகம் செய்தது, ஆகிய காரணங்களுக்காக அவரை ஆதரிக்க முன்வந்தோம்” என்றும் அன்வார் தனது செய்தியில் கூறியிருக்கிறார்.

“அம்னோவும், தேசிய முன்னணியும் தொடுத்த அவமானங்களையும், தாக்குதல்களையும் பொறுமையுடன் எதிர்கொண்டு, பக்காத்தான் ஹரப்பான் தேர்தல் இயந்திரத்தை வலுப்படுத்துவதில் மட்டுமே மகாதீர் கவனம் செலுத்தினார். அம்னோ-தேசிய முன்னணி அரசாங்கத்தால் நஜிப் துன் ரசாக் தலைமைத்துவத்தின் கீழ் நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காண மகாதீருக்கு அனைவருக்கும் ஆதரவு கொடுப்போம்” என்றும் அன்வார் தனது கையொப்பமிட்ட கடிதத்தில் தெரிவித்து, அந்தக் கடிதத்தை தனது முகநூல் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

மகாதீருக்கும் தனக்கும் இடையிலான பழைய குறைகூறல்களை அம்னோவும் தேசிய முன்னணியும் தொடர்ந்து மக்களுக்கு விநியோகித்து வந்தன என்பதையும் அன்வார் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

“இன்னும் 24 மணி நேரத்தில் நாட்டின் எதிர்காலமும், நமது மக்களின் நிலைமையும் உங்கள் கரங்களில் இருக்கப் போகிறது. அறிவார்ந்த முறையில் பொறுப்புணர்வுடனும் வாக்களியுங்கள்” என்றும் அன்வார் தனது கடிதத்தில் வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.