கோலாலம்பூர் – பக்காத்தான் ஹராப்பான் கூட்டங்களில் மலாக்காரர்ள் இல்லை என்றும், அதில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் ஜசெக கட்சியைச் சார்ந்தவர்கள் என்றும் தேசிய முன்னணித் தலைவர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்திருக்கிறார்.
“நகர்ப்புறங்களில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டங்களில் பார்த்தால், அதில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் மலாய்க்காரர்கள் அல்லாதவர்களாக இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஜசெக ஆதரவாளர்கள்” என்று நேற்று திங்கட்கிழமை டிவி3-ல் நடைபெற்ற நேர்காணலில் நஜிப் தெரிவித்திருக்கிறார்.
“அதனால் தான் கூறுகிறேன். என்னுடைய கூட்டங்களில், எனக்கு மிகப் பெரிய அளவிலான மக்கள் தேவையில்லை. எனக்கு 10,000 உள்ளூர்வாசிகளும், 20,000 வெளியூர்களைச் சேர்ந்தவர்களும் இருந்தால் போதும்” என்றும் நஜிப் கூறியிருக்கிறார்.
மேலும், தேசிய முன்னணி இன்னும் வலுவாக தான் இருக்கிறது என்றும் நஜிப் உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்.
“நிறைய இடங்களை நான் பார்வையிட்டேன். எனக்குக் கிடைத்த தகவலின் படியும், துணை அமைச்சர்கள் மற்றும் மூத்த அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அளித்த தகவலின் படியும் உண்மையான நிலவரம் என்னவென்பது எனக்குத் தெரிகின்றது.
“இது சமூக ஊடக விளையாட்டு அல்ல. உண்மையில் மக்கள் மத்தியில் எங்களுடைய அரசியல் தளம் இன்னும் வலுவாகவே இருக்கின்றது. எங்களது பலமும் தெரியும், எங்களது பலவீனமும் தெரியும்” என்று நஜிப் தெரிவித்திருக்கிறார்.