புத்ரா ஜெயா – 1எம்டிபி குறித்த விவகாரங்களை பொது மக்களின் பார்வைக்கு முன்வைக்கும் நடவடிக்கையாக 1எம்டிபி குறித்த கணக்கறிக்கை அதிகாரத்துவ இரகசிய சட்டத்தின் கீழ் இருந்து அகற்றப்பட்டு, பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கக் கணக்காய்வாளர் தயாரித்த இந்த 1எம்டிபி கணக்கறிக்கை தயாரித்து முடிக்கப்பட்டவுடன், அந்த அறிக்கை அதிகாரத்துவ இரகசியச் சட்டத்தின் கீழ் வைக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்தது.
இதன் காரணமாக, யாரும் அந்த அறிக்கை குறித்து பேச முடியாத – எழுத முடியாத – வழக்கு தொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து கடும் கண்டனங்கள் எழுந்தாலும், இறுதி வரை இந்த அறிக்கை அதிகாரத்துவ இரகசியச் சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்தது.
இன்று தேசியக் கணக்காய்வாளர் மதினா முகமட் பிரதமர் துன் மகாதீரைச் சந்தித்ததைத் தொடர்ந்து, 1எம்டிபி அறிக்கை பகிரங்கப்படுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது.
இனி அந்த அறிக்கையில் காணப்படுவது என்ன என்ற விவரங்கள் வெளிவரத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.