கோலாலம்பூர் – (17 மே 2018 – அதிகாலை 12.30 மணி நிலவரம்)
புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை அதிகாலை 12.30 மணி வரை ஜாலான் லங்காக் டூத்தாவிலுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் இல்லத்தைச் சுற்றி பல காவல் துறை வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன என இணைய ஊடகங்களும், தொலைக்காட்சி ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன.
‘பிளேக் மாரியா’ எனப்படும் கறுப்பு நிற பெரிய காவல் துறை வாகனம் ஒன்றும் நஜிப் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருக்கின்றது. பொதுவாக கைது செய்து காவலில் வைக்கப்படுபவர்களை அழைத்துச் செல்லும் வாகனம் இதுவாகும்.
இந்நிலையில் காவல் துறை குழுவொன்று நஜிப் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது. வணிகக் குற்றங்களுக்கான பிரிவினர் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது.
நஜிப்புக்கு நெருக்கமான ஒரு சிலர், மற்றும் அவரது பத்திரிக்கைச் செயலாளர் தெங்கு ஷாரிபுடின் மற்றும் அவரது வழக்கறிஞர்கள் நஜிப் இல்லத்தை வந்தடைந்திருக்கின்றனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நஜிப் இல்லத்தின் முன் நடக்கும் சம்பவங்களை அஸ்ட்ரோ அவானி நேரலையாக ஒளிபரப்பத் தொடங்கியிருக்கிறது.
இதற்கிடையில், நஜிப் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் நஜிப் இல்லத்தின் முன் பத்திரிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர்.
ஏறத்தாழ இதே சமயத்தில், புக்கிட் பிந்தாங் பகுதியிலுள்ள பெவிலியன் ரெசிடென்சஸ் என்ற ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் காவல் துறையினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.