Home தேர்தல்-14 அடுத்தடுத்து அதிரடி செய்திகள்! பரபரப்புகள்! திணறும் ஊடகங்கள்!

அடுத்தடுத்து அதிரடி செய்திகள்! பரபரப்புகள்! திணறும் ஊடகங்கள்!

2157
0
SHARE
Ad
துன் மகாதீர் – பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர் மே 14-ஆம் தேதி வழங்கிய நேர்காணலின்போது…

கோலாலம்பூர் – பொதுத் தேர்தல் நடைபெறும் காலத்தில்தான் பொதுவாக அதிகமான அரசியல் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும். அவற்றை உடனுக்குடன் வாசகர்களுக்கு தெரிவித்து விட்டு, பொதுத் தேர்தல் முடிந்தவுடன் பணிக் பளுவால் ஏற்பட்ட களைப்பால் ஓய்வெடுக்கச் செல்வது ஊடகவியலாளர்களின் வழக்கம்.

புதிய அமைச்சரவை அமைவது வரைதான் கொஞ்சம் பரபரப்பு இருக்கும். அதன் பின்னர் எல்லாம் அமைதியாகி வழக்கமான நிலைமைக்குத் திரும்பிவிடும். இதுதான் மலேசியாவில் பொதுத் தேர்தல் காலத்தில் இருந்து வந்த நடைமுறை.

ஆனால் கடந்த சில நாட்களாக, புதிய தலைமைத்துவ மாற்றம் துன் மகாதீரின் தலைமையின் கீழ் நடந்தது முதல், அடுத்தடுத்து அதிரடி செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

மகாதீர் பதவியேற்கிறார்…
#TamilSchoolmychoice

அதன் தாக்கங்களை தாங்கிக் கொள்ள முடியாமல், அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளை உடனுக்குடன் வெளியிட இணைய ஊடகங்களே திணறிக் கொண்டிருக்கின்றன.

எதை முதலில் வெளியிடுவது எதைப் பின்னர் வெளியிடுவது, எங்கு நிருபர்களை நிறுத்துவது என தொலைக்காட்சி ஊடகங்களும், பத்திரிக்கைகளும் திட்டமிட வேண்டியுள்ளது.

வழக்கமாக, பத்திரிக்கையாளர்கள் பிரதமர் அலுவலகத்தில் ஒன்று கூடி மொய்த்திருப்பார்கள்.

செராஸ் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் அன்வார்

ஆனால், இப்போதோ, துன் மகாதீரின் அலுவலகத்தில் ஒரு பத்திரிக்கையாளர் கூட்டம், அன்வார் இப்ராகிம் விடுதலையாகப் போகும் செராஸ் மருத்துவமனையில் ஒரு கூட்டம், என ஆங்காங்கு பத்திரிக்கை நிருபர்கள் கூடாரம் அமைத்துக் காத்திருக்கின்றனர்.

தேசிய முன்னணி வென்றிருந்தால் கூட இந்த அளவுக்கு செய்திகள் வெளிவந்திருக்காது என நினைக்கத் தோன்றுகிறது.

ஒரு புறம், மாநில அரசாங்கங்கள் அமையும் செய்திகள், மறுபுறம் புதிய அமைச்சரவை குறித்த செய்திகள், இன்னொரு கோணத்தில் பிரதமராக மகாதீர் எடுக்கும் அதிரடி முடிவுகள், 1எம்டிபி குறித்த அறிவிப்புகள், அன்வார் இப்ராகிம் விடுதலை தொடர்பான பரபரப்புகள் இப்படியாக தினமும் தாங்க முடியாத அதிர்ச்சிகளோடு, நடப்பது கனவா, நனவா என நம்மை நாமே கிள்ளிப் பார்த்துக் கொள்ளும் வண்ணம் நாட்கள் நகர்கின்றன.

பிரதமரைச் சந்திக்க வந்த புருணை சுல்தான்

அடுத்த 100 நாட்களில் தாங்கள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக, ஜிஎஸ்டி போன்ற விவகாரங்கள் மீதிலான ஆலோசனைக் கூட்டங்கள் – எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் – இன்னொரு புறத்தில் செய்திகளாக மலர்ந்து கொண்டிருக்கின்றன.

இதற்கிடையில், முக்கிய அரசாங்க அதிகாரிகளின் பதவி விலகல், இட மாற்றங்கள் – குடிநுழைவுத் துறையினால் கறுப்புப் பட்டியலிடப்பட்டவர்கள் – என இவையும் பரபரப்பான அதிரடியான செய்திகளாக உலா வந்து கொண்டிருக்கின்றன.

நாங்கள் மட்டும் சளைத்தவர்களாக என்ன – எனக் கேட்பதுபோல் கடலுக்கு அப்பால் சபா, சரவாக் மாநிலங்களும் தங்களின் பங்குக்கு, தேசிய முன்னணியில் இருந்து விலகுவது – சபாவில் யார் முதலமைச்சர் என்ற குழப்பம் – சரவாக் தேசிய முன்னணிக் கட்சிகளின் திடீர் பல்டி – என அந்தப் பக்கத்திலும் இருந்தும் பஞ்சமில்லாமல் செய்திகள் பறந்து வருகின்றன.

தான் வெளியிட்ட காணொளியில் டோனி பெர்னாண்டஸ்

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல், 1எம்டிபி குறித்த கணக்காய்வு அறிக்கை, அதிகாரத்துவ சட்டத்தின் கீழ் இருந்து அகற்றப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக, 1 எம்டிபி குறித்த பல விவகாரங்கள் புற்றீசல்கள் போல் புறப்படப் போகின்றன.

நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களைப் பார்க்கும் போது ஏறத்தாழ இந்த வருடம் முழுவதும் ஒவ்வொரு நாளும் மலேசியர்களுக்கு இப்படித்தான் இருக்கப் போகிறது எனத் தோன்றுகிறது.

மாமன்னரின் அரண்மனையில் வருகையாளர்கள் பதிவேட்டில் கையெழுத்திடும் அன்வார்

இதில் ஆறுதலான, மகிழ்ச்சிகரமான மற்றொரு அம்சம் என்னவென்றால், மலேசியர்கள் இப்போதுதான் முதன் முறையாக அஸ்ட்ரோ அவானி, பெர்னாமா, டிவி3 போன்ற தொலைக்காட்சி ஊடகங்களை அரசியல் செய்திகளுக்காகப் பார்க்கத் தொடங்கியிருக்கின்றார்கள்.

அவை நியாயமாக, எல்லாத் தரப்பு செய்திகளையும் பாரபட்சமின்றி வெளியிடத் தொடங்கியிருப்பதால்!

புதிய மலேசியாவுக்குத் தயாராவோம்!

இதற்குத் தானே இத்தனை பேரும் கூடி வாக்களித்தோம்?

-இரா.முத்தரசன்