Home தேர்தல்-14 நஜிப் தொடர்புடைய இடங்களில் சோதனை : யாரும் கைது செய்யப்படவில்லை

நஜிப் தொடர்புடைய இடங்களில் சோதனை : யாரும் கைது செய்யப்படவில்லை

1003
0
SHARE
Ad

கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தொடர்புடைய 5 இடங்களில் நேற்று இரவு தொடங்கி காவல் துறையினர் முற்றுகையிட்டு அதிரடி சோதனைகள் நடத்தியதைத் தொடர்ந்து, இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை.

நஜிப்பின் தாமான் டூத்தா இல்லம் சோதனையிடப்பட்டதாக அவரது வழக்கறிஞர் டத்தோ ஹர்ப்பால் சிங் கிரெவால் இன்று வியாழக்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் மாறாக, சில விலையுயர்ந்த பொருட்கள் மட்டும் கைப்பற்றப்பட்டு காவல் துறையினரால் எடுத்துச் செல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மூன்று பெட்டிகளில் எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களில் விலையுயர்ந்த பெண்களுக்கான கைப்பைகளும் அடங்கும் என்றும் ஹர்ப்பால் தெரிவித்தார்.

எந்த சட்டத்தின் கீழ் நஜிப்பின் இல்லங்கள் சோதனையிடப்பட்டன என்பது இதுவரையில் தெரிவிக்கப்படாவிட்டாலும், பண இருட்டடிப்பு சட்டத்தின் (Money Laundering Act) கீழ் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும் ஹர்ப்பால் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை, யார் மீதும் எந்தவிதக் குற்றச்சாட்டுகளும் கொண்டு வரப்படவில்லை என்றும் ஹர்ப்பால் தெரிவித்தார்.

நஜிப் தொடர்புடைய 5 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டதாக புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்தின் வணிகக் குற்றங்களுக்கான இயக்குநர் டத்தோஸ்ரீ அமார் சிங் உறுதிப்படுத்தியுள்ளார்.

தாமான் டூத்தாவிலுள்ள நஜிப்பின் இல்லம், அவரது புத்ரா ஜெயா அலுவலகம், பெவிலியன் அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவை சோதனையிடப்பட்ட இடங்களில் அடங்கும் என நம்பப்படுகிறது