Home நாடு மஇகா தேசியத் தலைவர் போட்டியில் 4 பேர் குதிக்கலாம்!

மஇகா தேசியத் தலைவர் போட்டியில் 4 பேர் குதிக்கலாம்!

2261
0
SHARE
Ad

MIC-logoகோலாலம்பூர் – மஇகா தேசியத் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடமாட்டேன் என நேற்று புதன்கிழமை நடைபெற்ற மத்திய செயலவைக் கூட்டத்திற்குப் பின்னர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அறிவித்ததைத் தொடர்ந்து, அடுத்த மஇகா தேசியத் தலைவர் பதவிக்குப் போட்டியிட நால்வர் பரிசீலித்து வருவதாக மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுத் தேர்தலில் ஏற்பட்ட மோசமான தோல்வி, தாங்கள் அங்கம் வகிக்கும் தேசிய முன்னணியே ஆட்சியை இழந்தது போன்ற காரணங்களால் மிகவும் தொய்வடைந்து, உற்சாகமிழந்து மஇகாவினர் காணப்படுகின்றனர்.

டாக்டர் சுப்ரா – “மீண்டும் போட்டியில்லை”

இந்நிலையில், அடுத்த புதிய தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற மிகப் பெரிய பொறுப்பும் கடமையும் ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து மஇகா கிளைத் தலைவர்களிடையே மெல்ல மெல்ல கட்சி மீதான ஆர்வம் ஏற்பட்டிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

காரணம், இந்த முறை நடைபெறவிருக்கும் கட்சித் தலைவருக்கான தேர்தலில், புதிய மஇகா சட்டவிதித் திருத்தங்களின்படி ஒவ்வொரு கிளையிலிருந்தும் 10 பொறுப்பாளர்கள் வாக்களிப்பர்.

தேசியத் தலைவர் பதவிக்குக் குறி வைக்கும் நால்வர்

நடப்பு தேசியத் துணைத் தலைவர் எஸ்.கே.தேவமணி

இதுவரையில் 4 முக்கியத் தலைவர்கள் தேசியத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது குறித்த மஇகா கிளைத் தலைவர்களிடையே கலந்தாலோசித்து வருவதாக மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடப்பு மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணியின் ஆதரவாளர்கள் அவர் தேசியத் தலைவர் பதவிக்குப் போட்டியிட வேண்டும் என்று விரும்புவதால் அதுகுறித்து அவர் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

எஸ்.ஏ.விக்னேஸ்வரன் – நடப்பு மஇகா தேசிய உதவித் தலைவர் – நாடாளுமன்ற மேலவைத் தலைவர்

மஇகா தேசிய உதவித் தலைவரும் நாடாளுமன்ற மேலவையின் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தேசியத் தலைவருக்கு போட்டியிடுவார் என நீண்ட காலமாகவே ஆரூடம் கூறப்பட்டு வந்தது.

அவரும் தனது ஆதரவாளர்களிடம் தேசியத் தலைவர் போட்டியிடுவது குறித்து விவாதித்து வருகின்றார் என மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சரவணன்

தேசியத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் மற்றொரு தலைவர் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம்.சரவணன். தற்போது மஇகா கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவராகவும், மஇகா மத்திய செயலவையில் நியமன உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

இறுதியாக, மஇகாவின் முன்னாள் தேசிய உதவித் தலைவரும், மத்திய செயலவையின் நியமன உறுப்பினருமான டத்தோ எஸ்.சோதிநாதனும் தேசியத் தலைவருக்குப் போட்டியிடலாம் என்றும் அந்த முடிவு எடுப்பது குறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் ஆலோசித்து வருவதாகவும் மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டத்தோ எஸ்.சோதிநாதன்

இறுதி நேரத்தில், இந்த நால்வரில் ஓரிருவர் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளலாம் அல்லது தங்களின் முடிவை மாற்றிக் கொண்டு தேசியத் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடலாம்.

காரணம், புதிய மஇகா சட்டவிதிகளின்படி, தேசியத் தலைவருக்குப் போட்டியிடும் ஒருவர் மற்ற பதவிகளுக்குப் போட்டியிட முடியாது என்ற நிலைமை இருக்கிறது.

எனவே, தேசியத் தலைவர் போட்டியில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்று இந்த நால்வரில் ஓரிருவர் கருதினால் தங்களின் முடிவை மாற்றிக் கொண்டு தேசியத் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட அவர் முடிவெடுக்கலாம்.

-இரா.முத்தரசன்