சிங்கப்பூர் – சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மலேசியாவின் புதிய பிரதமர் துன் மகாதீரைச் சந்திக்க நாளை சனிக்கிழமை கோலாலம்பூர் வந்தடைவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கையுடன் பல்வேறு திட்டங்களில் ஒருங்கிணைந்து ஈடுபட்டிருக்கும் மலேசியா முக்கியமாக சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் இடையிலான விரைவு இரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதில் நஜிப்பின் தலைமைத்துவத்தின் கீழ் தீவிரமாக செயல்பட்டு வந்தது.
லீ சியன் லூங் மகாதீரைச் சந்திக்கும் இரண்டாவது அனைத்துலகத் தலைவராவார். மகாதீர் பதவியேற்ற பின்னர் கடந்த திங்கட்கிழமை புருணை சுல்தான் பறந்து வந்து மரபுகளை மீறி மகாதீரைச் சந்தித்த முதல் அயல் நாட்டுத் தலைவராவார்.
அதனை அடுத்து நாளை சனிக்கிழமை சிங்கை பிரதமர் கோலாலம்பூர் வருகிறார்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பு குறித்துக் கருத்துரைத்த மகாதீர், இரு நாடுகளுக்கும் இடையிலான திட்டங்கள் குறித்து தான் ஆராய்ந்து வருவதாகவும், திறந்த மனதுடன் லீ சியன் லூங்குடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடப் போவதாகவும் கூறியிருக்கிறார்.