கோலாலம்பூர் – காவல் துறையினர் தங்களின் கடமையைச் செய்யும் அதே நேரத்தில், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கௌரவமாக நடத்தப்பட வேண்டும் என மூத்த ஆலோசகர்கள் மன்றத்தின் தலைவரான துன் டாயிம் சைனுடின் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிக்கையாளர் கூட்டம் ஒன்றில் வேண்டுகோள் விடுத்தார்.
“காவல் துறையினரின் விசாரணைகள் பற்றி யாரும் குறைகூறவில்லை. ஆனால், அதிகாலை 3.00 மணிக்கு வீட்டில் நுழைந்து விசாரணைகள் நடத்த வேண்டுமா? அது தேவையில்லை. அவர்களைத் தூங்க விடுங்கள்” என டாயிம் கூறினார்.
அதுவும் தற்போது நோன்பு மாதம் என்பதால் அவர்களை தூங்க விட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மலேசியக் குடிமக்கள் யாராக இருந்தாலும் அவர்கள் காவல் துறையினரால் கௌரவமாக நடத்தப்பட வேண்டும் என்று கூறிய டாயிம், அதிலும் நஜிப் முன்னாள் பிரதமர் என்பதால் அவருக்குரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
ஏற்கனவே, ஷா ஆலாம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சமாட், பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இசா ஆகியோரும் அகால வேளையில் நஜிப் இல்லத்தில் சோதனைகள் நடத்தப்படுவது குறித்து கண்டனங்களைத் தெரிவித்திருக்கின்றனர்.