Home தேர்தல்-14 நஜிப் வீட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட மர்மப் பெட்டி!

நஜிப் வீட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட மர்மப் பெட்டி!

847
0
SHARE
Ad
தாமான் டூத்தாவிலுள்ள நஜிப் இல்லம்

கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் தாமான் டூத்தா இல்லத்தில் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் அதிரடி சோதனைகளின் ஒரு பகுதியாக இன்று வெள்ளிக்கிழமை காலை காவல் துறையைச் சேர்ந்த 4 கார்கள் அங்கு வந்தடைந்தன.

சுமார் ஆறரை மணி நேரம் கழித்து ஒரு மர்மமான பெட்டியை எடுத்துக் கொண்டு அந்தக் கார்கள் நஜிப்பின் இல்லத்திலிருந்து பிற்பகல் 3.45 மணியளவில் புறப்பட்டுச் சென்றன.

நீல நிறத்திலான நெகிழிப் பையிலான (பிளாஸ்டிக்) ஒரு பெட்டி அந்த நான்கு கார்களில் ஒன்றில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.

#TamilSchoolmychoice

அந்தப் பெட்டியில் என்ன இருக்கிறது என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. நேற்று முதல் நஜிப் வீட்டில் துளையிடப்பட்டு உடைக்கப்பட்ட பாதுகாப்புப் பெட்டகம்தான் கொண்டு செல்லப்பட்ட பெட்டியா என்ற ஆரூடமும் எழுந்துள்ளது.

பெவிலியன் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் பெட்டிகளில்…

இதற்கிடையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகள் என அடையாளம் காட்டிக் கொண்ட அதிகாரிகளும் இரண்டு கார்களில் வந்து சேர்ந்தனர். ஒவ்வொரு காரிலும் நான்கு அதிகாரிகள் இருந்தனர்.

அவர்கள் கைப்பெட்டிகளுடன் நஜிப் வீட்டினுள் நுழைந்தனர் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், நஜிப் தொடர்பான 6 இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு, விலையுயர்ந்த பெண்கள் கைப்பைகள், கைக்கடிகாரங்கள், ஆபரணங்கள், ஆகியவை அடங்கிய 284 பெட்டிகள் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

நஜிப் தொடர்புடைய பெவிலியன் அடுக்குமாடி குடியிருப்பில் காவல் துறை வாகனங்கள்

அத்துடன் 72 பயணப் பெட்டிகளில் பல நாடுகளின் நாணயங்களைக் கொண்ட ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டிருப்பதாக வணிகக் குற்றப் பிரிவுக்கான இயக்குநர் டத்தோஸ்ரீ அமார் சிங் அறிவித்திருக்கிறார்.

இவை யாவும் 1எம்டிபி விசாரணை தொடர்பில் நடத்தப்படும் சோதனைகள் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.