கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் புத்ரா ஜெயா அலுவலகத்தில் 8 பாதுகாப்புப் பெட்டகங்கள் இருப்பதாகவும் அவை இன்னும் திறக்கப்படவில்லை என்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நஜிப் தரப்பில் ஒத்துழைப்பு வழங்கினால் அந்தப் பெட்டகங்களும் திறக்கப்படும் என்றும் இல்லையெனில் அந்தப் பெட்டகங்களும் வலுக்கட்டாயமாக உடைத்துத் திறக்கப்படும் என்றும் காவல் துறையினர் தெரிவித்திருப்பதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், பூட்டைத் திறக்கும் 2 வல்லுநர்களைக் கொண்டு துளையிடப்பட்ட நஜிப் இல்லத்தில் இருந்த பாதுகாப்புப் பெட்டகம் உடைத்துத் திறக்கப்பட்டு காவல் துறை தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
அந்தப் பெட்டகத்திற்குள் ஏராளமான ரொக்கப் பணம் இருப்பதாகவும், அந்தப் பணத்தின் மதிப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை என்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சுமார் 20 ஆண்டுகாலம் பழமையான அந்த பெட்டகத்திற்கான சாவி காணவில்லை என நஜிப் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து அந்தப் பெட்டகம் துளையிடப்பட்டு, உடைத்துத் திறக்கப்பட்டது.

இதற்கிடையில், நஜிப் இல்லத்தில் இருந்து உடைத்துத் திறக்கப்பட்ட பாதுகாப்புப் பெட்டகம் இதுதான் என, சமூக ஊடகங்களில் மேலே காணப்படும் புகைப்படம் ஒன்றும் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், இது அதிகாரபூர்வ தகவல் அல்ல!