Home தேர்தல்-14 1எம்டிபி கடனுக்காக 6.98 பில்லியன் ரிங்கிட் செலுத்திய நிதி அமைச்சு

1எம்டிபி கடனுக்காக 6.98 பில்லியன் ரிங்கிட் செலுத்திய நிதி அமைச்சு

1133
0
SHARE
Ad
நிதி அமைச்சராக – முதல் நாள் பத்திரிக்கையாளர் சந்திப்பு

கோலாலம்பூர் – இதுநாள் வரையில் மூடிமறைக்கப்பட்ட 1எம்டிபி விவகாரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் வெளிவரத் தொடங்கியுள்ளன.

1எம்டிபி எடுத்திருந்த கடன்கள் மற்றும் அதற்கான வட்டிகள் அனைத்தும் – 1எம்டிபி நிறுனத்தாலேயே செலுத்தப்பட்டு வருகின்றன என்றும் அரசாங்கம் அதில் சம்பந்தப்படவில்லை என்பது போன்ற தோற்றமும் இதுவரையில் உருவாக்கப்பட்டிருந்தது.

ஆனால், நிதி அமைச்சராக நேற்று பொறுப்பேற்ற லிம் குவான் எங் தனது முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் 1எம்டிபி கடன்களுக்கான வட்டிகளைச் செலுத்த தேசிய முன்னணி அரசாங்கம் ஏப்ரல் 2017 முதற்கொண்டு இதுவரையில் 6.98 பில்லியன் ரிங்கிட் செலுத்தியிருப்பதாகக் கூறியிருக்கிறார்.

முதல் நாள் அமைச்சுக்கு வரும் லிம் குவான் – உடன் டோனி புவா (இடது) ஓங் கியான் மிங் (வலது)
#TamilSchoolmychoice

மேலும், 1எம்டிபி குறித்த பல கோப்புகள் “சிவப்புக் கோப்புகள்” எனப் பட்டியலிடப்பட்டு, நிதி அமைச்சின் முக்கிய அதிகாரிகள் கூட அவற்றைப் பார்க்க முடியாத வண்ணம் தடைவிதிக்கப்பட்டிருந்தது எனத் தெரிவித்த லிம் குவான் எங், அத்தகைய சிவப்புக் கோப்புகள் அனைத்தையும் அந்தத் தடையிலிருந்து விடுவித்திருப்பதாகவும், இனி அவற்றைப் பார்ப்பதற்குரிய அதிகாரம் கொண்ட யாரும் அவற்றைப் பார்வையிடலாம் என்றும் அறிவித்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை காலை 7.40 மணிக்கு குவான் எங் நிதி அமைச்சின் அலுவலகம் வந்தபோது அவருடன் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டோனி புவா மற்றும் ஓங் கியான் மிங் (பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர்) ஆகியோரும் உடன் வந்தனர்.

டாமன்சாரா (முன்பு பெட்டாலிங் ஜெயா உத்தாரா) நாடாளுமன்ற உறுப்பினரான டோனி புவா தொடர்ந்து 1எம்டிபி குறித்த புலனாய்வுகளை மேற்கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.