Home நாடு டத்தோ வி.கோவிந்தராஜ் காலமானார்

டத்தோ வி.கோவிந்தராஜ் காலமானார்

1768
0
SHARE
Ad
அமரர் வி.கோவிந்தராஜ்

கோலாலம்பூர் – மஇகாவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும், இந்திய சமுதாயத்தில் நீண்ட காலமாக அரசியல், சமூகப் பணிகளில் ஈடுபட்டிருந்தவருமான டத்தோ வி.கோவிந்தராஜ் (வயது 85) இன்று புதன்கிழமை (மே 23) அதிகாலையில் காலமானார்.

மஇகா பத்துமலைக் கிளையில் உறுப்பினராகச் சேர்ந்த கோவிந்தராஜ், அந்தக் கிளையின் தலைவராக துன் சாமிவேலு செயல்பட்ட காலத்தில் அவருக்குக் கீழ் கிளைச் செயலாளராகப் பணியாற்றினார். அவருக்கும் சாமிவேலுவுக்கும் இடையில் நீண்ட கால நட்பும், நெருக்கமும் இருந்து வந்தது.

மஇகா அரசியலில் சாமிவேலுவின் முதன்மைத் தளபதியாக விளங்கியவர் கோவிந்தராஜ். பின்னர் சாமிவேலு சிலாங்கூர் மாநிலத் தலைவராக 1977-இல் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவருக்கு மாநிலச் செயலாளராக கோவிந்தராஜ் செயல்பட்டார்.

#TamilSchoolmychoice

1979-இல் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் மறைந்த பின்னர் நடைபெற்ற போர்ட் கிளாங் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் மஇகா சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற கோவிந்தராஜ், அரசாங்கத்தில் நாடாளுமன்ற செயலாளராகவும் பதவி வகித்தார்.

மஇகா தேசிய உதவித் தலைவராகவும் அவர் பணியாற்றியிருக்கிறார்.

சாமிவேலுவுடன் கொண்ட கருத்து வேறுபாடுகளினால் மஇகாவிலிருந்து விலகி புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தோற்றுவித்த கோவிந்தராஜ் சில ஆண்டுகள் கழித்து அந்தக் கட்சியைக் கலைத்து விட்டு பின்னர் மீண்டும் மஇகாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தார்.

அந்த நாள் நினைவுகள் – பின்வரிசையில் இடமிருந்து 3-வதாக நிற்கிறார் கோவிந்தராஜ் – முன்வரிசையில் 3-வதாக சாமிவேலு – வளரும் கலைஞர்கள் நாடக மன்றம் (1965) – படம் உதவி: கே.விஜயசிங்கம்

மலேசியக் கலைத் துறையிலும் தனி முத்திரை பதித்தவர் கோவிந்தராஜ். 1950-ஆம், 60-ஆம் ஆண்டுகளில் மலேசிய தமிழ் நாடகக் கலை உயிர்ப்புடன் இருந்த காலகட்டங்களில் அந்தத் துறையில் துடிப்புடன் செயல்பட்டவர், அப்போது தகவல் இலாகாவின் பிரச்சார அதிகாரியுமாக இருந்த கோவிந்தராஜ்.

விஜயசிங்கம் இரங்கல்

நாடகக் கலையுடன் மிக நீண்ட காலம் கோவிந்தராஜ் கொண்டிருந்த தொடர்புகளை நன்கு அறிந்தவரும், அவருடன் நெருக்கமாகப் பழகியவருமான மலேசியத் தமிழ்க் கலைஞர் இயக்கத்தின் தலைவரும், சிவாஜி கலை மன்றத்தின் தலைவருமான கே.விஜயசிங்கம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

டான்ஸ்ரீ குமரன் இரங்கல்

கோவிந்தராஜ் மறைவுக்கு மஇகாவின் முன்னாள் தேசிய உதவித் தலைவர் டான்ஸ்ரீ க.குமரன் தனது பழைய நண்பரின் இழப்புக்காக ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருக்கிறார்.

மறைந்த கோவிந்தராஜ் அவர்களின் இறுதிச் சடங்குகள் நாளை வியாழக்கிழமை (மே 24) நண்பகல் 12.30 முதற்கொண்டு பிற்பகல் 2.30 மணி வரை கீழ்க்காணும் முகவரியில் – அவரது இல்லத்தில் நடைபெறும்:

No: 20, Indian Settlement, Batu Caves, Selangor