கோலாலம்பூர், மார்ச் 28- கிறிஸ்தவர்கள் இன்று புனித வியாழனை கடைபிடிக்கிறார்கள்.
இன்றுதான், உலக மக்களுக்காக சிலுவையில் இறக்க வேண்டிய நேரம் நெருங்குவதை உணர்ந்தவராய் இயேசு தம் சீடர்களின் பாதங்களை கழுவி, பணிவுடன் வாழ்வது பற்றி அவர்களுக்கு கற்றுக்கொடுத்தார்.
அதன்பின், தமது மரணத்தை அடையாளப்படுத்தும் வகையில் நற்கருணை விருந்தை ஏற்படுத்தினார்.
தம் உடலையும் ரத்தத்தையும், அப்பம், ரசம் ஆகியவற்றின் வடிவில் சீடர்களுக்கு கொடுத்தார். யூதாஸ் தம்மை காட்டிக் கொடுப்பான், பேதுரு (பீட்டர்) மறுதலிப்பார், மற்ற சீடர்கள் கைவிட்டு விட்டு தப்பி ஓடுவார்கள் என்பதை இயேசு முன்னறிவித்தார். அதனை தொடர்ந்து அவர் கைது செய்து இழுத்துச் செல்லப்பட்டார். இந்த நிகழ்வுகள் அனைத்தையும் கிறிஸ்தவர்கள் இன்று நினைவு கூர்கிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்த புனித வெள்ளிக்கிழமையை கிறிஸ்தவர்கள் நாளை (29ந்தேதி) அனுசரிக்கிறார்கள்.
இயேசுவின் சிலுவை மரணம் மனிதகுல மீட்பு என்பதே கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. உலக வரலாற்றில் சாவையே லட்சியமாக கொண்டு ஒரு மனிதர் வாழ்ந்தார் என்றால் அவர் இயேசுவாக மட்டுமே இருக்க முடியும் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.
இயேசுவின் மரணம், இறைமகனாகிய அவரிடம் நம்பிக்கை கொள்ளும் ஒவ்வொருவருக்கும் மீட்பு அளிக்கிறது. கிறிஸ்தவர்கள் அனைவரும் இயேசுவின் மீட்பு பணியைத் தொடர அழைக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதை நினைவுகூரும் வகையில் நாளை புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது.
இயேசுவின் வாழ்வு சிலுவை மரணத்தோடு முடிந்துவிடவில்லை. சிலுவை மரணத்தின் மூலமே இயேசு உயிர்த்தெழுந்து கடவுளுக்குரிய மாட்சியை வெளிப்படுத்தினார் என்பதை பைபிள் எடுத்துக்கூறுகிறது. இந்த புனித வெள்ளி நமது வாழ்வின் லட்சியங்களை புனிதமாக்கட்டும்.