Home கலை உலகம் திரைவிமர்சனம்: ‘காலா’ – உணர்வுப்பூர்வமான கதை! ரஜினி அசத்தல் நடிப்பு!

திரைவிமர்சனம்: ‘காலா’ – உணர்வுப்பூர்வமான கதை! ரஜினி அசத்தல் நடிப்பு!

1675
0
SHARE
Ad

சென்னை – மும்பையின் தாராவி பகுதியில் உள்ள குடிசைப் பகுதிகளையெல்லாம் அழித்துவிட்டு அப்பகுதியை நவீனக் கட்டிடங்களாக மாற்ற நினைக்கிறார் அரசியல்வாதியான ஹரிதாதா (நானா படேக்கர்).

ஆனால், ‘நிலம் எங்களின் உரிமை.. அதை யாருக்கும் விட்டுத் தரமாட்டோம்’ என அதற்கு மிகப் பெரிய எதிர்ப்பாக இருக்கிறார் தாராவி பகுதி மக்களின் தலைவரான கரிகாலன் (ரஜினிகாந்த்).

அதிகாரத்திற்கும், உரிமைக்கும் இடையே நடக்கும் யுத்தத்தில் இறுதியில் அதிகாரம் ஜெயித்ததா? அல்லது மக்களின் உரிமை ஜெயித்ததா? என்பதை தனக்கே உரிய பாணியில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித்.

#TamilSchoolmychoice

கரிகாலன் என்ற காலாவாக ரஜினிகாந்த் அசத்தல் நடிப்பு. கருப்பு நிற வேஷ்டி சட்டையும், வெள்ளை தாடியுமாக ஈர்க்கிறார். ரஜினிகே உரிய மாஸ் அறிமுகம் இல்லாமல் மிகச் சாதாரணமாக திரையில் வருகிறார்.

என்றாலும், மனைவி செல்வியிடம் (ஈஸ்வரி ராவ்) கொஞ்சல், முன்னாள் காதலி ஹூமா குரேஷியிடம் மரியாதை, மகன்களிடம் கண்டிப்பு, பேரக்குழந்தைகளுடன் விளையாட்டு, எதிரிகளிடம் அதிரடி என எல்லாம் கலந்து கட்டி ரசிகர்களைக் கொண்டாட வைத்திருக்கிறார் ரஜினி.

மழையில் நனைந்தபடி வரும் ஒரு சண்டைக் காட்சிக்கு ஒட்டுமொத்த திரையரங்கும் ஆரவாரம் செய்கிறது. அந்தளவிற்கு அந்தக் காட்சியின் வீரியம் அமைந்திருக்கிறது.

ரஜினியின் மனைவி கதாப்பாத்திரத்தில் ஈஸ்வரி ராவ் ஏகப் பொருத்தம். அந்தக் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அவர் வரும் காட்சிகளில் எல்லாம் வாய்விட்டு சிரித்து ரசிக்க முடிகின்றது.

ரஜினியைப் பார்த்து, “திருநெல்வேலிக்கு ஒரு டிக்கெட்டு போடும். ஒமக்கு மட்டு தான் லவ் இருக்குன்னு நெனச்சீயளோ. என்னையும் பெருமாளுன்னு ஒருத்தன் காதலிச்சானாக்கும். நானும் போய் பார்த்துட்டு வாரேன்” என ஹூமா குரேஷியின் மீது பொறாமை கொண்டு கூறும் இடங்களிலெல்லாம் ஈஸ்வரி ஈர்க்கிறார்.

காலாவின் முன்னாள் காதலியாக ஹூமா குரேஷி, காலாவின் மகன்களாக மணிகண்டன், திலீபன், மணிகண்டனின் காதலியாக அஞ்சலி பட்டில், நண்பராக சமுத்திரக்கனி, போலீஸ் கதாப்பாத்திரத்தில் அரவிந்த் ஆகாஷ், நிருபராக ரமேஷ் திலக், தாதாவாக சம்பத் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே மிகச் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கின்றனர்.

திரைக்கதையைப் பொறுத்த வரையில் சற்று நிதானமாகவே சென்றாலும் கூட, அலுப்பு தெரியாத அளவிற்கு ரஜினியின் நடிப்பு நம்மை உற்சாகப்படுத்துகிறது.

ஜாதி மதம் இன்றி தமிழர்களின் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் வகையில் காட்சியமைப்புகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.

குறிப்பாக, நானா பட்டேகர் காலாவின் கோட்டையான தாராவிக்கு வந்துவிட்டு திமிருடன் திரும்பிச் செல்ல முயலும் போது, “ஹரிதாதா நான் உன்ன போகச் சொல்லலியே” என ரஜினி தனது ஸ்டைலில் சொல்லும் போது அங்குள்ள மக்கள் அதற்கு ஆதரவாக அதிரடி ஆக்சனில் இறங்குவது மிகவும் கவர்கிறது.

மேலும், ரஞ்சித்தின் சாட்டையடி வசனங்கள் படத்திற்குப் பக்கபலம் சேர்த்திருக்கின்றன.

இராமாயணத்தைக் கதையாகச் சொல்லியபடியே நிகழ்காலப் பிரச்சினையை இணைத்திருப்பது சிறப்பு.

மக்களின் போராட்டங்களில் அதிகாரம் எப்படி சதி வேலைகளைச் செய்து கலைக்கிறது என்பதை மிகத் தத்ரூபமாகக் காட்டி, தூத்துக்குடி போராட்டம் உட்பட தமிழகத்தில் நடக்கும் பல்வேறு போராட்டங்களை ஒப்பிட்டுப் பார்க்க வைக்கிறது காலா.

சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை மிரட்டல். ரஜினிக்கு ஆங்காங்கே கொடுத்திருக்கும் சிறப்புப் பின்னணி சூப்பரோ சூப்பர். பாடல்கள் அனைத்தும் இனிமை.

முரளி ஜியின் ஒளிப்பதிவில் தாராவியாகக் காட்டப்படும் குடிசைப் பகுதிகளும், அங்குள்ள மக்களின் வாழ்வியலும் கண்முன்னே வந்து செல்கின்றன.

குறிப்பாக, படத்தில் இரண்டு மூன்று முறை காட்டப்படும் தாராவி ஹெலிஷாட், படத்தின் ஒன்லைனை சொல்லிவிடுகின்றது.

கிளைமாக்சில் வண்ணங்களிலேயே முடிவைச் சொல்லியிருப்பது கவிதை.

மொத்தத்தில், ‘காலா’ – உணர்வுப்பூர்வமான கதை! ரஜினி அசத்தல் நடிப்பு!

ஃபீனிக்ஸ்தாசன்