புத்ரா ஜெயா, மார்ச் 28 – இன்றும் நாளையும் தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சித் தலைவர்களையும், மாநிலத் தலைவர்களையும் பிரதமர் நஜிப் தொடர்ந்தாற்போல் சந்தித்து வருவதைத் தொடர்ந்து நாடாளுமன்ற கலைப்பு ஆரூடங்கள் மீண்டும் தலைதூக்கி உள்ளன.
இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து பத்திரிக்கை நிருபர்களும், புகைப்படக்காரர்களும் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் 2.30 மணிவரை சபா, ஜோகூர், சிலாங்கூர், பேராக் மாநிலத்தின் தேசிய முன்னணி பிரதிநிதிகளை பிரதமர் தனித் தனியே சந்தித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இன்று காலை 9 மணி முதற்கொண்டு தலைவர்கள் தனித்தனி கார்களில் பிரதமர் அலுவலகம் வந்து சேர்ந்து சந்திப்புக்களில் ஈடுபட்டு வருவதாக ஸ்டார் ஆங்கிலப் பத்திரிக்ககையின் இணையத் தள செய்தி தெரிவித்தது.
நாளை தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளின் தலைவர்களும் பிரதமரைச் சந்திக்கவிருப்பதாகவும், வேட்பாளர் பட்டியல்கள் இறுதிவடிவம் பெறுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றம் தானாக கலையும் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னதாகவே நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதுதான் தேசிய முன்னணிக்கு சாதகமாக இருக்கும் என்பதால் அவ்வாறே செய்வதற்கு பிரதமர் முடிவு செய்திருப்பதாகத் தெரிகின்றது.
இப்பொழுதே சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு மாநில சட்டமன்றங்கள் இயல்பாகவே கலையும் வரை காத்திருந்தது, தேசிய முன்னணியின் பலவீனமாக கருதப்படுகின்றது.
பொதுத் தேர்தல் தாமதமான காரணத்தால், எதிர்க்கட்சிகள் தங்களின் பிரச்சாரத்தை மேலும் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளனர் என்பதோடு, இந்த தாமதத்தைப் பயன்படுத்தி, அந்த இடைப்பட்ட கால அவகாசத்தில் எதிர்க்கட்சிகள் தங்களின் வேட்பாளர் பட்டியல், வியூகங்கள் போன்ற அம்சங்களை மேலும் மெருகேற்ற முடிந்திருக்கின்றது.