மும்பை, மார்ச் 28- மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற இந்தி நடிகர் சஞ்சய்தத் இன்று அவரது வீட்டில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது ஜெயில் போகும் வரை குடும்பத்தினருடன் அமைதியாக இருக்க விடுங்கள் எனக் கூறினார்.
பேட்டி அளித்த நேரத்தில் அருகில் இருந்த தனது சகோதரி தோளில் சாய்ந்து கண்ணீர் விட்டு அழுதார். இது அனைவரையும் உருக வைத்தது.
1993 ம் ஆண்டில் மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவராக சிறப்பு நீதிமன்றம் மூலம் அவருக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவரது மேல் முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் சஞ்சய்தத் சிறைத்தண்டனையை உறுதி செய்ததுடன் 6 ஆண்டை 5 ஆண்டாக குறைத்து தீர்ப்பளித்தது.
இதன்படி இவர் ஜெயிலுக்கு செல்ல நீதிமன்றம் சில காலம் அவகாசம் வழங்கியுள்ளது. தீர்ப்பிற்கு பின்னர் அவர் அமைதியாக இருந்து வந்தார். யாரையும் சந்திக்கவில்லை.
தீர்ப்புக்கு பின்னர் இன்று சஞ்சய்தத் வீட்டு முன்பு நிருபர்கள் கூடினர். அவரது மனநிலை குறித்து அறிய விரும்புவதாக அங்கு காத்து நின்றனர். அந்நேரத்தில் வெளியே வந்த சஞ்சய்தத் நிருபர்கள் முன்பு பேசினார்.
பத்திரிகைகளுக்கும், மக்களுக்கும் நான் சொல்லிக் கொள்வ தென்னவென்றால் நான் மிக துயரமான கட்டத்தில் இருக்கிறேன். நான் மிகவும் நொறுங்கி போய் இருக்கிறேன். நான் எனது மீதான தண்டனையை குறைக்க கோரி வலியுறுத்தப்போவதில்லை. எனது தண்டனை குறித்து யாரும் விவாதிக்க வேண்டாம். கோர்ட் உத்தரவை மதிக்கும் இந்திய குடிமகன்களில் நானும் ஒருவன். கோர்ட் உத்தரவுக்கு பணிந்து நான் விரைவில் சரண் அடைவேன். இந்திய நாட்டை மிகவும் நேசிக்கிறேன். திரைப்படம் தொடர்பான சில பணிகள் முடித்து கோர்ட் அளித்த நேரத்தில் ஜெயிலுக்கு போவேன். அது வரை என்னை, எனது குடும்பத்தினருடன் அமைதியாக வாழ விடுங்கள். இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போது கிளம்புகிறேன் என எழுந்தார். இந்நேரத்தில் கண்ணீர் விட்டு அழுதார். தொடர்ந்து அருகில் இருந்த தனது சகோதரி தோளில் சாய்ந்து அழுதார். இந்நேரத்தில் சகோதரி அவரை தழுவி தேற்றினார்.
நடிகர் சஞ்சய்தத் கிரிமினல் குற்றவாளி அல்ல அவரை விடுவிக்க வேண்டும் என பல தரப்பினர் குரல் எழுப்பி வந்தனர். இந்நேரத்தில் இவரது கண்ணீர் பேட்டி கூடுதல் அலையை ஏற்படுத்தியிருக்கிறது.