Home நாடு “மகாதீர் விரும்பும்வரை பிரதமராக இருக்கலாம்” – அன்வார்

“மகாதீர் விரும்பும்வரை பிரதமராக இருக்கலாம்” – அன்வார்

1142
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தனக்கும் மகாதீருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் – மோதல்கள் – இருப்பதுபோல் ஊடகங்கள்  அடிக்கடி வெளியிட்டு வரும் செய்திகளின் தாக்கத்தைத் தணிப்பது போல் பிகேஆர் ஆலோசகர் டத்தோஸ்ரீ  அன்வார் இப்ராகிம் தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றார்.

மகாதீர் விரும்பும்வரை பிரதமராக நீடிக்கலாம் என அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். “முதலாவதாக அவர்தான் இப்போதைக்குப் பிரதமர். இரண்டாவதாக அவருக்கு காலக் கட்டுப்பாடு எதையும் விதிக்க நான் விரும்பவில்லை. அவர் விரும்பும்வரை வரை பிரதமராக இருக்கட்டும். அவருக்குத் தேவையான ஒத்தழைப்பை வழங்கி வருவேன்” என அன்வார் ஸ்டார் ஆங்கிலப் பத்திரிக்கைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் நிக்கெய் மாநாட்டில் உரையாற்றிய மகாதீர் “மக்கள் விரும்பும்வரை நான் பிரதமராக இருப்பேன். ஆனால் இரண்டாண்டுகளில்  எனக்கு 95 வயது ஆகியிருக்கும். இன்னும் எத்தனை நாள் நான் தாக்குப் பிடிப்பேன் என்பது எனக்கே தெரியவில்லை” என்று கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியிருக்கும் அன்வார், “பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி அரசாங்கம் மிகவும் எளிதில் உடையக் கூடியது எனப் பலர் கூறி வருகின்றனர். ஆனால் நிலைமை அவ்வாறில்லை. எனக்கும் மகாதீருக்கும் இடையில் போராட்டம் வெடித்தால்தான் இந்தக் கூட்டணிக்கு ஆபத்து வரும். மகாதீர் பிரதமராக செயல்பட அவருக்குரிய விசாலமான இடத்தையும், வசதிகளையும் ஏற்படுத்தித் தர விரும்புகிறேன். அவர் விரும்பும்வரை பிரதமராக நீடிக்கலாம்” எனக் கூறியிருக்கிறார்.