Home நாடு நம்பிக்கைக் கூட்டணி அமைச்சரவையில் 3 இந்திய அமைச்சர்கள்

நம்பிக்கைக் கூட்டணி அமைச்சரவையில் 3 இந்திய அமைச்சர்கள்

1875
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – விரைவில் விரிவாக்கப்படவிருக்கும் நம்பிக்கைக் கூட்டணி அமைச்சரவையில் 3 இந்திய அமைச்சர்கள் இடம் பெறுவதன் மூலம் மலேசிய இந்தியர்களின் அரசியல் வரலாற்றில் புதிய சாதனையோடு கூடிய அத்தியாயம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிகேஆர் சார்பில் இந்திய அமைச்சராக நியமிக்கப்படப் போகிறவர் யார் என்ற கேள்வி மே 9 பொதுத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அடிக்கடி எழுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அமைச்சரவையில் கூடுதலாக நியமிக்கப்படவிருப்பவர்களின் பட்டியலில் பிகேஆர் சார்பில் சேவியர் ஜெயகுமார் பெயரும் இடம் பெற்றிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தின் கோல லங்காட் நாடாளுமன்றத் தொகுதியில் சேவியர் வெற்றி பெற்றார்.

#TamilSchoolmychoice

பிகேஆர் கட்சியின் தேசிய உதவித் தலைவராகவும் அவர் செயல்படுகிறார்.

அவ்வாறு சேவியர் நியமிக்கப்பட்டால் அதன் மூலம் மத்திய அமைச்சரவையில் 3 இந்திய அமைச்சர்கள் இடம் பெறும் புதிய சாதனை தோற்றுவிக்கப்படும்.

இரண்டாவது அமைச்சருக்கே காலமெல்லாம் கூக்குரலிட்டு, கூப்பாடு போட்டு, கெஞ்சிக் கேட்ட காலம் மாறி, இப்போது ஒரேடியடியாக 3 அமைச்சர்களை இந்திய சமுதாயம் பெறும் வரலாற்றுத் தருணம் கனிந்திருக்கிறது.

அதிலும், இந்தியர்கள் என்னும்போது மூன்று அமைச்சர்களில் ஓர் இந்து அமைச்சரும், ஒரு சீக்கிய அமைச்சரும், ஓர் இந்தியக் கிறிஸ்துவ அமைச்சரும் இணைந்து ஒரே நேரத்தில் அமைச்சரவையில் இடம் பெறும் புதிய சூழலும் உருவாகும்.

கோபிந்த் சிங் டியோ மலேசியாவின் முதலாவது சீக்கிய அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் நிலையில் சேவியர் ஜெயகுமாரும் அமைச்சராக நியமிக்கப்பட்டால், முதலாவது இந்தியக் கிறிஸ்துவ அமைச்சராக அவர் திகழ்வார்.

ஜூலை 16-ஆம் தேதி புதிய நாடாளுமன்றம் முதன் முறையாகக் கூடவிருப்பதால் அதற்கு முன்பாக அமைச்சரவை நியமனங்கள் நிகழும் – அநேகமாக நோன்புப் பெருநாள் முடிவடைந்ததும் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.