Home கலை உலகம் திரைவிமர்சனம்: ‘கோலி சோடா 2’ – முதல் பாகத்தின் விறுவிறுப்பு இல்லை!

திரைவிமர்சனம்: ‘கோலி சோடா 2’ – முதல் பாகத்தின் விறுவிறுப்பு இல்லை!

1148
0
SHARE
Ad

கோலாலம்பூர் – விஜய் மில்டனின் ‘கோலி சோடா’ பார்த்தவர்களுக்குத் தெரியும். பணம், பதவி, அதிகாரம் என அசுர பலம் படைத்தவர்களை சாமானியர்கள் எதிர்ப்பது தான் கதை.

கோயம்பேடு மார்க்கெட்டை கதைக்களமாக வைத்து மிக எளிமையான, எதார்த்தமாக திரைக்கதையமைத்து நம்மை இருக்கையின் நுனிக்குக் கொண்டு வந்திருப்பார்.

அதனால் தான் ‘கோலி சோடா 2’ ஆரம்பிக்கப் போவதாக விஜய் மில்டன் அறிவித்ததில் இருந்து அதற்கு அதிக அளவிலான எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

#TamilSchoolmychoice

குறிப்பாகப் படத்தில் சமுத்திரக்கனி, கவுதம் மேனன் நடிக்கிறார்கள் என்றவுடன் அந்த எதிர்பார்ப்பு இன்னும் பல மடங்கு பெருகியது.

அதன் படி, இன்று ‘கோலி சோடா 2’ உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளோடு வெளியாகியிருக்கிறது. சரி.. படம் எப்படி இருக்கிறது? பார்ப்போம்.

படத்தின் ஆரம்பமே, ஊரை விட்டு ஓடிப்போக நினைக்கும் சமுத்திரக்கனியை மடக்கிப் பிடிக்கிறது கவுதம் மேனன் தலைமையிலான போலீஸ் படை.

விசாரணையில், சமுத்திரக்கனியிடம் பல புகைப்படங்களைத் தூக்கி வீசி, இவர்கள் யார் என்று தெரியுமா? என்று கேட்கிறார் கௌதம்.

அதில் 3 இளைஞர்களின் புகைப்படங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கும் தனக்குமான தொடர்பு குறித்து சொல்ல ஆரம்பிக்கிறார் சமுத்திரக்கனி.

பரத் சீனி, எசக்கி பரத் மற்றும் வினோத் ஆகியோர் சமுத்திரக்கனி வசிக்கும் பகுதியில் வசித்து வரும் இளைஞர்கள். மூன்று பேருமே வாழ்வில் எப்படியாவது முன்னேறி மேலே வந்துவிட வேண்டுமென்று நினைப்பவர்கள்.

அவர்கள் மூவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள் என்றாலும், அவர்கள் மூவருக்கும் சமுத்திரக்கனியை நன்கு தெரியும். அவர்களை சமுத்திரக்கனி ஒரு ஆலோசகராக இருந்து வழிநடத்துகிறார்.

இப்படியிருக்க அந்த 3 இளைஞர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 3 ரௌடிகளால் 3 விதமான பிரச்சினைகள் வருகின்றது. இதனால் மிகவும் பாதிக்கப்படும் அந்த இளைஞர்கள், ஒருகட்டத்தில் ஒன்றாக இணைந்து 3 ரௌடிகளையும் ஒழித்துக் கட்டுவதே தங்களது நோக்கமாக நினைக்கின்றனர்.

அசுர பலம் கொண்ட அந்த 3 ரௌடிகளை 3 சாமானிய இளைஞர்களால் ஒழித்துக்கட்ட முடிந்ததா? என்பதே படத்தின் பிற்பாதி சுவாரசியம்.

ஹீரோவாக, வில்லனாக, ஆசானாக, அப்பாவாக நடிப்பில் பல பரிமாணங்களை எடுத்து ரசிக்க வைத்தவர் சமுத்திரக்கனி. தனது வயதிற்கேற்ற கதாப்பாத்திரங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென நினைப்பவர். அதெல்லாம் சரி தான் ஆனால் அதற்காக சமீபத்திய படங்களில் அவர் ‘வாழ்வே மாயம்’ அளவுக்கு சோகக் கதாப்பாத்திரங்களாகத் தேர்ந்தெடுப்பது சற்றே நெருடுகிறது. ‘கோலி சோடா 2’-ல் அவர் நடித்த கதாப்பாத்திரத்தில் வேறு யாராவது ஒரு நடுத்தர வயது நடிகர் நடித்திருந்தால் பெரிய வித்தியாசம் எதுவும் தெரிந்திருக்காது. காரணம், அந்தக் கதாப்பாத்திரத்திற்கு சமுத்திரக்கனி போன்ற பெரிய நடிகர் தேவையில்லை என்றே தோன்றுகிறது.

கவுதம் மேனன்.. இதற்கு முன்னர் தனது படங்களில் லேசாகத் தலைகாட்டிவிட்டுச் செல்பவர். இந்தப் படத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதல் நேரத்தில் வந்து போகிறார். என்றாலும், தனது வசீகரிக்கும் கண்களால், ஸ்டைலிஷ் உடல்மொழியால், சட்டென மனதில் பதிந்துவிடும் குரலால் ஈர்க்கிறார். நடிகர் கவுதம் மேனன் ஆவதற்கு நல்ல தொடக்கம்.

வில்லன்களாக சரவண சுப்பையா, மலையாள நடிகர் செம்பன் ஜோஸ் ஆகியோர் நல்ல தேர்வு. செம்பன் ஜோசுக்கு பின்னணி குரல் பொருந்தவில்லை. குரலும், உடல்மொழியும் ஒட்ட மறுக்கிறது.

கதாநாயகிகளாக ரக்‌ஷிதாவும், கிருஷாவும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். குறிப்பாக காதல் காட்சிகளில் இருவரும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

திரைக்கதையைப் பொறுத்தவரையில் முதல் பாதியில் எதார்த்தமாகச் செல்லத் தொடங்கி, ஆங்காங்கே சில இடங்களில் தொய்வடைகின்றது. கதாப்பாத்திரங்களுக்கு இடையிலான தொடர்புகளை விளக்குவதில் நேரடியாக இல்லாமல் மறைமுகமாகச் சொல்ல முயற்சி செய்திருக்கிறது.

உதாரணமாக ரேகாவிற்கும், சமுத்திரக்கனிக்குமான தொடர்பு, கிருஷாவிற்கும், சாதி சங்கத் தலைவருக்குமான தொடர்பு ஆகியவற்றில் அழுத்தமில்லை. குழந்தையை செம்பன் ஜோஸ் கடத்தியதன் பின்னணி என்பதில் குழப்பம். அதேபோல், சமுத்திரக்கனியின் பிளாஷ்பேக்கில் சொல்லப்படும் கருத்தில் அவ்வளவு சுவாரசியமில்லை.

இரண்டாம் பாதியை எடுத்துக் கொண்டால், வில்லன்களுக்குப் பயந்து ஓடி ஒளிந்த 3 இளைஞர்களும், திடீரென ‘ஹரி’ படத்தை மிஞ்சும் அளவிற்கு காற்றாய் பறந்து ஒரு 5 நிமிடங்களில் வில்லன்களை அதகளப்படுத்திவிடுகின்றனர். அக்காட்சிகள் தெலுங்குப் பட சாயலில் படு வேகமாக நகர்த்தப்பட்டிருப்பதில் படத்தின் முதல் பாதியில் இருந்த எதார்த்தம் தொலைந்து சற்றே சினிமாத்தனம் மேலோங்கி ரசிகர்களை நெளிய வைக்கிறது.

முதல் பாதியைப் போல் இரண்டாம் பாதியிலும் எதார்த்தமாகக் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தால் நிச்சயமாக ‘கோலி சோடா’ அளவிற்கு ‘கோலி சோடா 2’-ம் மனதில் நின்றிருக்கும்.

என்றாலும், மூன்று இளைஞர்களின் வாழ்க்கையை வித்தியாசமான கோணங்களில் சொல்ல முயற்சி செய்து, அதில் ஜிஎஸ்டி உட்பட மக்கள் பிரச்சினைகளைப் பேசியிருப்பதில் ‘கோலி சோடா 2’ ரசிக்க வைக்கின்றது.

குறிப்பாக, படத்தில் இடம்பெற்றிருக்கும் வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன.

“உன் வாழ்க்கையை அமைச்சுக்க ஒரு வாய்ப்பு தான் கிடைக்கும். அதை சரியா பயன்படுத்திக்கிட்டா உன் வாழ்க்கைக்கு நீதான் முதலாளி”

“நான் அந்த சாதியில பிறந்தது என் தப்பா? ஆரம்பத்துல எல்லாம் ஒன்னா தான் இருந்திச்சு. கோயில நீ பாத்துக்க, விவசாயத்த நீ பாத்துக்கன்னு மனுஷனுங்க பிரிச்சானுங்க. அதுக்கப்பறம் சேத்துல கால வச்சு உழைச்சவன் கோயில் வாசல்ல நின்னு கும்பிட்டிட்டு போனான். ஆனா காலப்போக்குல அவனை கோயிலுக்குள்ளயே வரவிடாம செஞ்சிட்டானுங்க”

இப்படியாகப் படத்தில் மனதில் நிற்கும் பல வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. விஜய் மில்டனே ஒளிப்பதிவும் செய்திருப்பதால், கதைக்கு ஏற்பட கேமராவைக் கையாண்டிருக்கிறார்.

அச்சு ராஜாமணியின் பின்னணி இசை மனதில் நிற்கவில்லை என்றாலும் கூட, பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பொண்டாட்டி, கெளம்பு ஆகிய பாடல்கள் வித்தியாசமாக இருக்கின்றன.

மொத்தத்தில், ‘கோலி சோடா 2’ – முதல் பாகத்தின் விறுவிறுப்பு, எதார்த்தம், வீரியம் இரண்டாம் பாகத்தில் இல்லை. சுமார் தான்.

-ஃபீனிக்ஸ்தாசன்