கோலாலம்பூர் – நேற்று வெள்ளிக்கிழமை அமைச்சு ஏற்பாடு செய்திருந்த ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பில், பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, சுமார் 55,000 மக்களுடன் 4 மணி நேரமாக கைகுலுக்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மாலை 4.30 மணியளவில் நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தவுடன் பேசிய மகாதீர், “நான் 55,000 விருந்தினர்களுடன் கைகுலுக்கினேன். எனது கை விழுந்துவிடுமோ என அஞ்சினேன். கடவுளுக்கு நன்றி. என்னால் இன்னும் நன்றாகச் செயல்பட முடிகின்றது” என மகாதீர் தெரிவித்தார்.
ஏற்பாட்டாளர்கள் கூறிய தகவலின் படி, புத்ராஜெயா ஸ்ரீபெர்டானாவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ வீட்டில் நடைபெற்ற திறந்த இல்ல உபசரிப்பில் சுமார் 80,000 பேர் கலந்து கொண்டனர்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்ரீபெர்டானாவில் ஹரி ராயா திறந்த உபசரிப்பை அமைச்சு ஏற்பாடு செய்வது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கி, கடந்த 2017-ம் ஆண்டு வரை, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், கோலாலம்பூரில் உள்ள புத்ரா அனைத்துலக வர்த்தக மையத்தில் தான் திறந்த இல்ல உபசரிப்பை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.