Home உலகம் போர்க்குற்ற விசாரணைகள் கருணாவிடம் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்!- மனித உரிமைகள் கண்காணிப்பகம்

போர்க்குற்ற விசாரணைகள் கருணாவிடம் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்!- மனித உரிமைகள் கண்காணிப்பகம்

511
0
SHARE
Ad

karuna_amman_002இலங்கை, மார்ச் 29- இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மிக மோசமான முறையில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிடமிருந்தே போர்க்குற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய நாடுகளுக்கான பணிப்பாளர் பிரட் அடம்ஸ், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கருணா அம்மானின் கருத்தை வைத்துக் கொண்டு அவரை சுதந்திரமாக செயல்பட விட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கருணா அம்மான் உறுப்பினராக இருந்த போது, பல குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளார். எனவே இலங்கை அரசின் போர்க்குற்ற விசாரணை அவரிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

1990ம் ஆண்டு ஜூன் மாதம் 400 தொடக்கம் 600 போலீசார் விடுதலைப் புலிகள் அமைப்பினரிடம் சரணடைந்ததாகவும், அவர்களில் பலர் கருணாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த போது சித்திரவதை செய்யப்பட்டதாகவும் சிங்கள, முஸ்லிம் போலீசார் கொலை செய்யப்பட்டதாகவும் மனித உரிமைக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

எனினும் பீபீசிக்கு பேட்டியளித்துள்ள கருணா, அந்த சம்பவங்களோடு தன்னை தொடர்பு படுத்தாமல் கருத்து வெளியிட்டுள்ளதாகவும் பிரட் அடம்ஸ் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டினார்.

1990ம் ஆண்டு 75 முஸ்லிம்கள் படுகொலை மற்றும் மட்டக்களப்பில் 200 பொதுமக்கள் படுகொலை என்பவற்றுடன் கருணா குழுவினர் தொடர்பு இருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் சிறுவர்களை படையில் இணைத்துக் கொண்டதாக 2004ம் ஆண்டு மனித உரிமைகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் வீடு வீடாகச் சென்று சிறுவர்களை படையில் சேர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டமைக்கு கருணா முக்கிய பங்கு இருப்பதாகவும் இன்றைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.