Home நாடு திரைவிமர்சனம்: ‘டிக் டிக் டிக்’ – கதை பழசு.. தொழில்நுட்பம், உருவாக்கம் ரசிக்க வைக்கிறது!

திரைவிமர்சனம்: ‘டிக் டிக் டிக்’ – கதை பழசு.. தொழில்நுட்பம், உருவாக்கம் ரசிக்க வைக்கிறது!

1400
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நள்ளிரவில் சென்னை சுனாமி காலனியில் வந்து விழுகிறது ஒரு 6 அடி உயர விண்கல். இப்பேரிடரில் பொதுமக்கள் 14 பேர் பலியாகின்றனர்.

மீட்புக் குழுவினர் ஒருவழியாக தகதகவென எரிந்து கொண்டிருக்கும் அந்த விண்கல்லை செயற்கை மழை பொழிய வைத்து அணைத்து அங்கிருந்து அப்புறப்படுத்திவிட, பொதுமக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.

ஆனால், இராணுவ தளபதி ஜெயபிரகாஷ் தலைமையிலான குழுவோ அந்த விண்கல்லை விட படுபயங்கரமாக புகைந்து கொண்டிருக்கிறது. காரணம், “இது சும்மா டிரெய்லர் தாம்மா.. மெயின் பிட்சர இன்னும் பார்க்கலியே” என்பது போல், அடுத்த 10 நாட்களில் சென்னையை சுற்றி 4 கோடி மக்களை அழிக்கும் அளவிலான மிகப் பெரிய விண்கல் பின்னாலேயே வந்து கொண்டிருப்பது அவர்களுக்குத் தெரிகிறது.

#TamilSchoolmychoice

அந்த விண்கல்லை இரண்டாக உடைத்துவிட்டால் அது பூமியைத் தாக்காது என விஞ்ஞானிகள் உறுதியாகக் கூற, அவ்வளவு பெரிய விண்கல்லை உடைக்கும் அளவிற்கு ஏவுகணைக்கு எங்கே போவது? என தலையைப் பிய்த்துக் கொள்கின்றனர்.

மற்ற நாடுகளிடம் மண்டியிட்டு உதவி கேட்பதை விட, வெட்கத்தை விட்டு கள்ள மார்க்கெட்டில் கேட்டுவிடுவோம் என அப்படியும் முயற்சி செய்து பார்க்கிறார்கள். “நீங்கள் கேட்பது ஒரு நாட்டையே அழிக்கக் கூடிய ஏவுகணை அது எங்களிடம் இல்லை” எனக் கையை விரித்து விடுகின்றனர் கள்ள ஏஜெண்டுகள்.

ஆனால், அவ்வளவு பெரிய ஏவுகணையை உலகில் ஒரே ஒரு நாடு மட்டும் உருவாக்கி அதை தங்களது விண்வெளி ஓடத்தில் வைத்திருப்பதாகவும், அதனைத் திருடுவது சாத்தியமே இல்லை என்றும் ஏஜெண்டுகள் துணுக்கு ஒன்றைக் கொடுக்கின்றனர்.

“சே.. அவ்வளவு தானா மேட்டரு? எங்கள்ட்டயும் திருட ஆள் இருக்குயா” என்பது போல் நிம்மதியாகும்  இராணுவத் தளபதி ஜெயபிரகாஷ், அப்படிப்பட்ட பலே திருடனைத் தேட தனது படைகளுக்கு உத்தரவிடுகிறார்.

தமிழ் சினிமாவில் வழக்கம் போல அதிபுத்திசாலிகள் எல்லாம் சிறையில் இருப்பது போல், கதாநாயகன் ஜெயம்ரவியும் செய்யாத தவறுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

அவரை இராணுவக் கட்டுப்பாட்டில் வெளியே அழைத்து வந்து, விண்வெளியில் உள்ள ஏவுகணையைத் திருடி, அதனை வைத்து விண்கல்லை உடைக்கும் பொறுப்பை ஒப்படைக்கிறது இந்திய இராணுவம்.

சாவியைத் திருடுவது, துப்பாக்கியை மறைத்து வைப்பது என சின்னச் சின்ன மேஜிக் வேலையெல்லாம் பண்ற நம்ம ஜெயம்ரவி, இராணுவப் பொறுப்ப ஏத்துகிட்டு விண்வெளிக்கு போயி விண்கல்லை உடைத்து நாட்டைக் காப்பாற்றினாரா? என்பது தான் படத்தின் சுவாரசியம்.

என்னது மேஜிக் செய்றவரு விண்வெளிக்குப் போறாரா? ஷ்….. அப்படியெல்லாம் கேட்கப்படாது மக்களே. படம் நல்லா இருக்கா? அதான் முக்கியம்.

ஜெயம்ரவி.. வழக்கம் போல் சிறப்பான நடிப்பு. முகபாவனைகளில் எப்போதும் அசத்தும் ஜெயம்ரவி, இந்த முறையும் அதனை நன்றாகவே செய்திருக்கிறார். குறிப்பாக படத்தில் தனது மகனாக நடித்திருக்கும் நிஜ மகன் ஆரவ் ரவியிடம் காட்டும் தந்தை பாசம் கண்கலங்க வைக்கிறது.

ஆரவ் ரவி.. ஜெயம்ரவியை விட அழகு. பேச்சிலும், நடை, உடை பாவனையிலும் அப்படியே ஜெயம்ரவியை உரித்து வைத்திருக்கிறார்.

இராணுவ அதிகாரியாக நிவேதா பெத்துராஜ் நன்றாக நடித்திருக்கிறார். ஜெயம்ரவியை முதலில் வெறுப்பதும், பின்னர் திறமையைக் கண்டு பணிந்து போவதுமாக ரசிக்க வைக்கிறார்.

அவருடன் மற்றொரு இராணுவ அதிகாரியாக வரும் வின்செண்ட் அசோகன் சிறப்பான நடிப்பு. மிடுக்குடன் இருக்கிறார்.

ரமேஷ் திலக் மற்றும் அர்ஜுனன் காமெடிக்காகச் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். மிகைப்படுத்தாமல் கதைக்குத் தேவையான அளவில் இருவரும் காமெடி செய்திருக்கின்றனர்.

இவர்களுடன் மலேசிய நடிகர் ஆரோன் அசிசும் முக்கியக் கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

கதை என்னவோ கமலின் ‘விக்ரம்’ காலத்துப் பழையது என்றாலும் கூட, அதனை நவீனப்படுத்தியதில் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் வெற்றியடைந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் மற்ற தமிழ்ப் படங்களுக்கு ஒரு முன்னுதாரணத்தைக் கொடுத்திருக்கிறார்.

தமிழில் வெளிவரும் முதல் விண்வெளிப்படம் என்பதால், படத்தில் இடம்பெற்றிருக்கும் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பம் தான் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதனை மிக அழகாக செய்யக் கூடிய திறமையான குழுவை வைத்து வேலை வாங்கியிருக்கிறார் இயக்குநர்.

விண்கல், விண்வெளி ஓடம், சந்திரன், கேப்ஸ்யூல் என அப்படியே தத்ரூபமாக விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பம் மூலமாக உருவாக்கியிருப்பது உண்மையில் ரசிக்க வைக்கிறது.

ஆனால், எளிதில் கணித்துவிடக் கூடிய வகையில் திரைக்கதை அமைத்திருப்பது,  தீவிர சினிமா ரசிகர்களுக்கு லேசான எரிச்சலை ஏற்படுத்தலாம். எளிய மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக பார்த்துப் பழகிய அதர பழசான சமாச்சாரங்களை இயக்குநர் இணைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

அதற்காக இப்படியா? என்று சில காட்சிகளை கேட்காமல் இருக்கவும் முடியவில்லை.

விண்வெளிக்குப் போனாலும், பழைய அர்ஜூன் படங்களில் வருவது போல், சிவப்பு, பச்சை வயரை வெட்டி விட்டு செயலிழக்கச் செய்வதெல்லாம் சகிக்க முடியவில்லை.

ஒரு நாட்டையே அழிக்கக் கூடிய ஆயுதம் விண்வெளி ஓடத்தில் இருக்கிறதாம். ஆனால் அதைப் பாதுகாக்க ஒரு பத்து துக்கடா வீரர்கள் என பல இடங்களில் லாஜிக்கை விண்வெளியில் இருந்து தூக்கி வீசி எறிந்திருக்கிறார் இயக்குநர்.

எஸ்.வெங்கடேசின் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகு. கதைக்குத் தேவையான வகையில் மிக அழகாகக் கையாண்டிருக்கிறார் வெங்கடேஸ்.

படத்திற்கு பக்கபலம் சேர்த்திருப்பது இசையமைப்பாளர் டி.இமான் தான். படத்தில்  பாடல் குறைவு என்பதால் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ஜெயம்ரவியைக் காட்டும் போது ஒரு வகை துள்ளல் இசை, ஆரவ் ரவியைக் காட்டும் போது உருக வைக்கும் இசை, விண்கல்லைக் காட்டும் போது நடுங்க வைக்கும் இசை என வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார். ‘குறும்பா’ பாடல் மனதில் நச்சென ஒட்டிக் கொள்கிறது.

மொத்தத்தில், லாஜிக் மீறல்களையெல்லாம் ஓரம் கட்டி வைத்துவிட்டுப் பார்த்தால், நிச்சயமாக ‘டிக் டிக் டிக்’ மனதிற்கு நிறைவான படம்.

-ஃபீனிக்ஸ்தாசன்