புதுடில்லி – நீண்ட காலமாக சர்ச்சையில் இருந்து வந்த காவிரி மேலாண்மை ஆணையம் செயல்படத் தொடங்கியுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி ஒழுங்காற்று குழுவை பாஜக அரசாங்கம் அமைத்துள்ளது. பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு காவிரி ஒழுங்காற்று குழு செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தில் இடம் பெறும் 9 பேர் கொண்ட பட்டியலையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.3 மாநில உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடக அரசு மட்டும் இதுவரையில் தனது தரப்பு பிரதிநிதியை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வந்தது.
தமிழகம் தரப்பில் தலைமைப் பொறியாளர் செந்தில்குமார் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரளா தலைமைப் பொறியாளர் கே.ஏ. ஜோஷி, புதுவை தலைமைப் பொறியாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் ஒழுங்காற்று குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.