Home நாடு அன்வாருக்கு முதுகுத் தண்டுப் பிரச்சனைக்காக சிகிச்சை

அன்வாருக்கு முதுகுத் தண்டுப் பிரச்சனைக்காக சிகிச்சை

1068
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா – இங்குள்ள மலாயாப் பல்கலைக் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிகேஆர் கட்சியின் பொதுத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்தும் ஆராய்ந்தும் வருவதாக அவரது குடும்பத்தினர் அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளனர்.

அன்வார் தற்போது முதுகுத் தண்டில் ஏற்பட்ட வலிக்காக சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்வார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் காட்சி

நேற்று சனிக்கிழமை இரவு,  அவர் அவசர மருத்துவ ஊர்தி (ஆம்புலன்ஸ்) மூலம் மருத்துவமனைக்குக் கொண்டுவரப் பட்டார்.

#TamilSchoolmychoice

அன்வார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்காக பிரார்த்தனை செய்த, உடல் நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கும் அவரது குடும்பத்தினர் தற்போது மருத்துவமனையில் அவரோடு இருந்து வருகின்றனர்.

சில முக்கிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதாலும், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பு தேவைப்படுவதாலும் அன்வாரைச் சந்திப்பதற்கு யாருக்கும் அனுமதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கிக்குப் பயணம் சென்றிருந்த அன்வார் கடந்த வியாழக்கிழமை நாடு திரும்பிய பின்னர் தோள்பட்டை மற்றும் முதுகுத் தண்டுப் பகுதிகளில் ஏற்பட்ட வலி காரணமாக நேற்று மலாயாப் பல்கலைக் கழக மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார்.