Home கலை உலகம் ஆகஸ்ட் 16 முதல் ஷாலினியின் ‘திருடாதே பாப்பா திருடாதே’

ஆகஸ்ட் 16 முதல் ஷாலினியின் ‘திருடாதே பாப்பா திருடாதே’

1671
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியாவிலும் அனைத்துலக தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கீதையின் ராதை திரைப்படத்தை வழங்கிய வெற்றிப் பட இயக்குனர் ஷாலினி பாலசுந்தரத்தின் தயாரிப்பில்
‘திருடாதே பாப்பா திருடாதே’ ஆகஸ்ட் 16 முதல் நாடெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியீடு காண உள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு மலேசியாவில் வெளியாகி, இந்தியா, சிங்கப்பூர், இலங்கை எனத் தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளிலெல்லாம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்ற ஒரு திரைப்படம் கீதையின் ராதை.

நமது சமூக வெளிப்படையாக பேச தயங்கும் ஆண் – பெண் உறவு. நட்புக்கும் காதலுக்கும் இடையே உள்ள மெல்லிய கோடு. குடும்ப உறவு, காதல், கல்யாணம் ஆகியவை குறித்த விவாதிக்கும் போது முழு வார்த்தைகளில் பேச முடியாத உணர்வுகளை உணர்ச்சியாக வெளிப்படுத்தி கீதையின் ராதை மூலம் சிறந்த இயக்குநர், கதாநாயகியாக ஷாலினி பாலசுந்தரம் முத்திரை பதித்து அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களை பெற்றார்.

#TamilSchoolmychoice

அத்திரைப்படத்தில் இடம்பெற்ற ‘என்னைக் கொல்லாதே’ என்ற பாடல் கடல் கடந்து தமிழகத்தில் கூட பல இளைஞர்களின் ரிங்டோனாக மாறியது. அந்தளவிற்கு ‘கீதையின் ராதை’ இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

கீதையின் ராதை திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, ‘ஸ்டோரி ஃபிலிம்ஸ்’ என்ற தனது சொந்த நிறுவனத்தை தொடங்கிய ஷாலினி, அதன் மூலம் ‘திருடாதே பாப்பா திருடாதே’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கி, அதில் தானே கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்.

‘கீதையின் ராதை’ திரைப்படத்தில் பருவ வயது காதலைச் சொல்லிய ஷாலினி, தற்போது இயக்கியிருக்கும் ‘திருடாதே பாப்பா திருடாதே’ திரைப்படத்தில் காதலோடு, மலேசியாவில் இருக்கும் முக்கியமான சமூகப் பிரச்சினைகளை கையில் எடுத்துள்ளார்.

குற்றச் செயல்களில் ஈடுபடும் இளைய தலைமுறையினர். அவர்கள் ஈடுபடும் திருட்டையும் திகிலையும் விறுவிறுப்பு கலந்த கதையம்சத்தோடு சொல்லியிருக்கிறார்.

“பெண்களிடம் நகை திருடப்படுவது தான் படத்தின் முக்கியக் கருவாக இருக்கும். நான் சிறுவயதாக இருந்த போது எனது வாழ்வில் நடந்த மூன்று முக்கியத் திருட்டுச் சம்பவங்கள் தான் இப்படி ஒரு படத்தை இயக்கத் என்னைத் தூண்டியது”
“அதற்காக படம் முழுவதும் திகிலாக இருக்கும் என எண்ணிவிட வேண்டாம். படத்தில் காதலும், ஆக்சனும் கலந்து தான் இருக்கும். நிச்சயமாக மலேசிய ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக இருக்கும்.

அதேவேளையில் வெளிநாடுகளில் உள்ள ரசிகர்களுக்கும் இத்திரைப்படம் மாறுபட்ட உணர்வைத் தரும். படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் ஒருமுறையாவது அவர்கள் வாழ்விலோ அல்லது அவர்களுக்குத் தெரிந்த உறவினர்கள், நண்பர்களின் வாழ்விலோ கண்டிப்பாக நடந்திருக்கும்.

அந்தளவிற்கு மலேசியாவில் நாம் சந்திக்கும் முக்கியப் பிரச்சினைகளில் ஒன்றாக படத்தின் கதைக்கரு அமைந்திருக்கிறது” என்கிறார் இயக்குநர் ஷாலினி.
இத்திரைப்படத்திற்கான திரைக்கதையை தனது கணவரும், ஒளிப்பதிவாளருமான சத்தீஸ் நடராஜனுடன் இணைந்து பல ஆய்வுகள் செய்த பிறகே உருவாக்கியதாகவும் ஷாலினி தெரிவித்தார்.

படத்திலுள்ள மொத்தம் 8 முக்கியக் கதாப்பாத்திரங்களில் பாடகர் சரேஸ் டி7, ஷாலினி பாலசுந்தரம், கபில், ஜெகன்நாதன், யுவராஜ், ஹேமா ஜி, மஞ்சுளா மற்றும் இர்பான் ஜைனி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 16-ம் தேதி, நாடெங்கிலும் உள்ள திரையரங்குகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவிருக்கிறது.
இசை ‘கீதையின் ராதை’ புகழ் ஜித்திஷ் தான் ‘திருடாதே பாப்பா திருடாதே’ திரைப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார்.

மொத்தம் 5 பாடல்கள் உள்ள இத்திரைப்படத்தில் இதுவரை, ‘வலிக்கிறதே’, ‘நீ அருகில்’ என்ற இரு பாடல்கள் அதிகாரப்பூர்வமாக யூடியூப்பில் வெளியாகி தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினைப் பெற்று வருகின்றன.

ஓவியா வரிகளில் உருவாகியிருக்கும் ‘வலிக்கிறதே’ என்ற பாடலை குமரேஸ் கமலக்கண்ணன் பாடியிருக்கிறார். ஃபீனிக்ஸ்தாசன் வரிகளில் உருவாகியிருக்கும் ‘நீ அருகில்’ என்ற பாடலை சங்கரி கிரிஷ், ஜித்திஸ் மற்றும் யாஸ்மின் ஆகியோர் பாடியிருக்கின்றனர்.

இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் மற்ற பாடல்கள் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

‘திருடாதே பாப்பா திருடாதே’ குறுமுன்னோட்டத்தை இந்த இணைப்பில் காணலாம்:
https://www.youtube.com/watch?v=xOGP7hfAMnA

‘வலிக்கிறதே’ பாடலை இந்த இணைப்பின் வழியாகக் காணலாம்:
https://www.youtube.com/watch?v=5oDuPBuYRQg

‘நீ அருகில்’ பாடலை இந்த இணைப்பின் வழியாகக் காணலாம்:
https://www.youtube.com/watch?v=hIut5UHVzEA

Comments