சான் பிரான்சிஸ்கோ – புகைப்படங்களைப் பதிவேற்றும் – பகிர்ந்து கொள்ளும் சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களோடு பீடு நடை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மேலும் பல கூடுதல் தொழில் நுட்ப வசதிகளை அந்தத் தளம் அறிமுகப்படுத்தவிருக்கிறது.
இன்ஸ்டாகிராம் டெலிவிஷன் எனப் பெயர் கொண்ட புதிய தொழில்நுட்ப வசதியின் வழி இனி ஒரு மணிநேர காணொளிகளைப் (வீடியோ) பயனர்கள் பதிவேற்றம் செய்ய முடியும். ஐஜிடிவி (IGTV) என அழைக்கப்படும் இந்தப் புதிய வசதி தனி குறுஞ்செயலியாகவும் செயல்படும்.
தற்போது இன்ஸ்டாகிராம் தளத்தில் ஒரு நிமிட நேர காணொளிகள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட முடியும்.
தற்போதைக்கு பதிவேற்றம் செய்யப்படும் காணொளிகளுக்கு கட்டணம் விதிக்கும் நடைமுறைகள் பின்பற்றப்படாது – விளம்பரங்கள் இடம் பெறாது – என்றாலும் காலப் போக்கில் பிரபலமான காணொளிகள் தயாரிப்பவர்கள் தங்களின் முயற்சிகளுக்காக வருமானங்களைப் பெறும் வகையிலான திட்டங்களை அறிமுகப்படுத்த இன்ஸ்டாகிராம் திட்டமிட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம், பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான குறுஞ்செயலித் தளமாகும்.
2012-இல் 715 மில்லியன் அமெரிக்க டாலர் விலையில் இன்ஸ்டாகிராம் தளத்தை பேஸ்புக் நிறுவனம் வாங்கியது.
ஏராளமான பிரபலங்கள் இன்ஸ்டாகிராம் மூலமாகத் தங்களின் புகைப்படங்களையும், காணொளிகளையும் பதிவேற்றம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.