Home நாடு அம்னோ பெக்கான்: நஜிப்புக்குப் பின்னர் அவரது மகன்!

அம்னோ பெக்கான்: நஜிப்புக்குப் பின்னர் அவரது மகன்!

876
0
SHARE
Ad

பெக்கான் – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அம்னோவின் தேசியத் தலைவர் பதவியிலிருந்து விலகி விட்டாலும், பெக்கான் அம்னோ தொகுதி தலைவர் பதவியில் இன்னும் தொடர்கிறார்.

நடந்து முடிந்த அம்னோ தொகுதித் தேர்தல்களில் பெக்கான் அம்னோ தொகுதியின் தலைவராக நஜிப் ஏகமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் பெக்கான் தொகுதியின் இளைஞர் பகுதித் தலைவராக நஜிப்பின் மூத்த மகன் முகமட் நிசார் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

40 வயதான முகமட் நிசார் நஜிப்பின் முதல் மனைவிக்குப் பிறந்த மூத்த மகனாவார்.

முகமட் நிசார் நஜிப்

இதனைத் தொடர்ந்து பெக்கான் அம்னோவின் அடுத்த தலைமைத்துவப் பொறுப்பை நஜிப்பின் மகனே ஏற்பார் என்பது கோடி காட்டப்பட்டுள்ளது.

பெக்கான் தொகுதி காலங் காலமாக நஜிப்பின் குடும்பத்தினரின் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கி வரும் தொகுதியாகும்.

பெக்கான் அம்னோ தொகுதியின் தலைவராகவும், பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த முன்னாள் பிரதமர் துன் அப்துல் ரசாக் 1976-இல் காலமான பின்னர் அந்தப் பொறுப்புகளுக்கு அவரது மகனான நஜிப் துன் ரசாக் நியமிக்கப்பட்டார்.

தற்போது நஜிப்பின் மகன் பெக்கான் இளைஞர் பகுதித் தலைவராகப் பொறுப்புக்கு வந்திருப்பதைத் தொடர்ந்து, அந்தத் தொகுதியின் அடுத்த கட்ட தலைமைத்துவத்திற்கு முகமட் நிசாரே பொறுப்பேற்பார் என்பதும் மறைமுகமாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மொத்தம் உள்ள 191 அம்னோ தொகுதிகளில் 73 தொகுதிகளில் அதன் தலைவர்கள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர் என அம்னோ தலைவருக்கான பொறுப்பு வகிக்கும் சாஹிட் ஹமிடி அறிவித்திருக்கிறார்.

சாஹிட் ஹமிடியும் பாகான் டத்தோ தொகுதியின் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

எதிர்வரும் ஜூன் 30-ஆம் தேதி அம்னோவின் தலைமைப் பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது.