மாஸ்கோ – உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் ‘இ’ பிரிவில் தேர்வாகும் குழுக்கள் எவை என்பதை முடிவு செய்ய நேற்று புதன்கிழமை இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன.
மலேசிய நேரப்படி இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.00 மணிக்கு இந்த ஆட்டங்கள் நடைபெற்றன.
ஓர் ஆட்டத்தில் பிரேசிலும் – செர்பியாவும் மோதின. இந்த ஆட்டத்தில் பிரேசில் செர்பியாவை 2-0 கோல் எண்ணிக்கையில் தோற்கடித்தது.
மற்றோர் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தும் கோஸ்தா ரிக்காவும் விளையாடின. இந்த ஆட்டம் 2-2 என சமநிலையில் முடிவடைந்தது.
முதல் பாதி ஆட்டத்தின்போது டிசிமயிலி முதல் கோலை 31-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்துக்காகப் புகுத்த – அடுத்து இரண்டாவது பாதி ஆட்டத்தில் கோஸ்தா ரிக்காவின் கே.வாஸ்டன் கோல் அடித்து 1-1 என்ற சமநிலையை உருவாக்கினார்.
88-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் டெர்மிக் தனது நாட்டிற்கான இரண்டாவது கோலை அடித்து முன்னணிக்குக் கொண்டு வந்தார்.
எனினும், 90 நிமிடங்களுக்கான ஆட்டம் முடிந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் கிடைத்த பினால்டியை கோஸ்தா ரிக்கா கோலாக்க ஆட்டம் மீண்டும் 2-2 என சமநிலைக்கு வந்தது.
இந்த முடிவைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து 5 புள்ளிகளுடன் ‘இ’ பிரிவிலிருந்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிச் செல்கிறது. அடுத்து ஜூலை 3-ஆம் தேதி இரண்டாவது சுற்றில் சுவீடனை சுவிட்சர்லாந்து சந்திக்கும்.
‘இ’ பிரிவில் 7 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்த பிரேசிலும் இரண்டாவது சுற்றுக்குத் செல்கிறது.