Home நாடு திருப்பம் : மலேசியாகினிக்கு வருகை தந்தார் நஜிப்!

திருப்பம் : மலேசியாகினிக்கு வருகை தந்தார் நஜிப்!

1212
0
SHARE
Ad
மலேசியாகினி அலுவலகத்தில் நஜிப்

பெட்டாலிங் ஜெயா – நாட்டின் முன்னணி இணைய ஊடகமான மலேசியாகினியின் அலுவலகத்திற்கு நேற்று புதன்கிழமை அவர்கள் சற்றும் எதிர்பார்க்காத ஒரு முக்கியப் பிரமுகர் வருகை தந்து அங்குள்ளவர்களை அதிர்க்குள்ளாக்கினார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்தான் அவர்!

மலேசியாகினி – நஜிப்புக்கு இடையில் எத்தனையோ மோதல்கள்! வழக்குகள்!

#TamilSchoolmychoice

பலமுறை மலேசியாகினி அலுவலகம் நஜிப் தலைமைத்துவத்தின் கீழ் காவல் துறையினரால் சோதனைக்கு உள்ளாகியிருக்கிறது.

அது மட்டுமல்ல! அம்னோ மற்றும் பிரதமர் துறை பத்திரிக்கையாளர்கள் சந்திப்புகளில் கலந்து கொள்ளக் கூடாது என மலேசியாகினிக்குத் தடையும் பல சமயங்களில் விதிக்கப்பட்டிருக்கிறது.

நஜிப் தேசிய முன்னணிக்குத் தலைமையேற்றுச் சந்தித்த 13-வது மற்றும் 14-வது பொதுத் தேர்தல்களில் தேசிய முன்னணிக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த மலேசியாகினி ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும், பத்திரிக்கை சுதந்திரம் காக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவான செய்திகளை வெளியிட்டு வந்தது.

காலச் சுழற்சியில், நஜிப் தற்போது எதிர்க்கட்சிக் கூட்டணியின் அங்கமாகியிருக்கிறார். அடுக்கடுக்கான வழக்கு விசாரணைகளையும், ஊழல் புகார்களையும் தினமும் சந்தித்து வருகிறார்.

நேற்று புதன்கிழமை காவல் துறையின் சார்பில் வணிகக் குற்றப் பிரிவுக்கான இயக்குநர் அமார் சிங் பத்திரிக்கையாளர்களிடம் நஜிப் தொடர்புடைய இல்லங்களில் கைப்பற்றப்பட்ட ஆபரணங்களின் விவரங்களைப் பகிரங்கமாக வெளியிட்ட அதே நாளில்தான் நஜிப்பும் மலேசியா கினி அலுவலகத்தில் காலடி பதித்திருக்கிறார்.

இதன் மூலம் தனது நீண்ட கால அரசியல் மற்றும் சட்டப் போராட்டத்திற்கு ஊடகங்களின் பங்கு எத்தகைய பலம் வாய்ந்தது என்பதை உணர்ந்து அதற்கேற்ப மலேசியாகினி அலுவலகத்திற்கும் அவர் வருகை தந்திருக்கிறார்.

ஆனால், இந்த கடந்த காலக் கசப்புகளையெல்லாம் புறந்தள்ளி நஜிப் நேற்று மலேசியாகினிக்கு வருகை தந்தபோது அவரை மலேசியாகினி ஆசிரியர் ஸ்டீவன் கான் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பிரமேஷ் சந்திரன் ஆகியோரும் மற்றும் பத்திரிக்கை ஆசிரியர் குழுவினரும் எதிர்கொண்டு வரவேற்றனர்.

நஜிப்பின் வருகையையும், அது தொடர்பான புகைப்படத்தையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட மலேசியாகினி தலைமைச் செயல் அதிகாரி பிரமேஷ் சந்திரன் “இன்று எங்கள் அலுவலகத்திற்கு வந்த எதிர்க்கட்சிப் பிரமுகர் யார் தெரியுமா?” என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

தொடர்ந்து மலேசியாகினிக்கு நேர்காணல் ஒன்றையும் நஜிப் வழங்கியிருக்கிறார்.

-இரா.முத்தரசன்