Home இந்தியா வெளிநாட்டுத் தமிழர்கள் தமிழ் கற்க தமிழக அரசு உதவி

வெளிநாட்டுத் தமிழர்கள் தமிழ் கற்க தமிழக அரசு உதவி

1695
0
SHARE
Ad

சென்னை – தமிழ் நாட்டுக்கு வெளியே பல நாடுகளில் பரவியிருக்கும் தமிழர் சமுதாயம் தொடர்ந்து தமிழ்க் கல்வியைப் பெறும் நோக்கில் தமிழக அரசு திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.

இந்தியாவில், தமிழ்நாட்டுக்கு வெளியே உள்ள 10 நகரங்களிலும் மற்றும் 16 அயல் நாடுகளிலும் தமிழ் கற்பிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தர தமிழக அரசு முனைந்துள்ளது.

இந்த அயல்நாடுகளில் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் இடம் பெற்றிருக்கின்றன.

#TamilSchoolmychoice

இந்தத் தகவல்களை அண்மையில் தமிழக சட்டமன்றத்தில் தெரிவித்த கலாச்சார அமைச்சர் மாஃபா கே.பாண்டியராஜன், தமிழ் கற்பிக்கும் மையங்கள் டில்லி, மும்பை, பெங்களூரு, போபால் மற்றும் அந்தமானின் போர்ட் பிளேர் ஆகிய நகர்களில் நிர்மாணிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதே போன்ற தமிழ் கற்பிக்கும் மையங்கள் 16 அயல் நாடுகளில் ஏற்படுத்தப்படும். அமெரிக்கா, பிரான்ஸ், ஐக்கிய அரபு குடியரசு, இந்தோனிசியா, சிங்கப்பூர், மலேசியா, மியன்மார், மொரிஷியஸ், ரியூனியன் தீவுகள், பிஜி, டிரினிடாட் டொபாகோ, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்த மையங்கள் அமைக்கப்படும்.

அதிகமான அளவில் தமிழர்கள் வாழும் இந்திய நகர்கள், நாடுகள் என்ற அடிப்படையில் இந்த மையங்கள் உருவாக்கப்பட்டு அந்தத் தமிழர்கள் தமிழை சுலபமாகக் கற்கவும், வாசிக்கவும், எழுதவும் கற்றுக் கொள்ளும் வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.

இதற்குரிய பாடத் திட்டங்களும் நூல்களும் தயாராக இருப்பதாகவும் பாண்டியராஜன் தெரிவித்திருக்கிறார்.

மியன்மார் மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளில் தமிழ் கலாச்சாரம் மீதான படிப்புப் பிரிவு (Course) ஒன்றும் உருவாக்கப்படும். தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் வாயிலாக இந்தப் படிப்பு உருவாக்கப்படும் என்றும் பாண்டியராஜன் தெரிவித்தார். இளம் வயது தமிழர்கள் தமிழ் கற்க வேண்டும் என்ற நோக்கில் உருவாகும் இந்தத் திட்டத்திற்கு சுமார் 22 இலட்சம் ரூபாய் செலவிடப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.