Home கலை உலகம் வயிறு குலுங்கும் நகைச்சுவை-உறைய வைக்கும் திகில் – “அச்சம் தவிர்” திரையீடு!

வயிறு குலுங்கும் நகைச்சுவை-உறைய வைக்கும் திகில் – “அச்சம் தவிர்” திரையீடு!

636
0
SHARE

கோலாலம்பூர் – வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகள், அதே வேளையில் நெஞ்சை உறைய வைக்கும் திகில் திரைக்கதை என இரட்டைக் கலவையாக – உருவாகியுள்ள உள்ளூர் தமிழ்த் திரைப்படமான ‘அச்சம் தவிர்’ இன்று வியாழக்கிழமை (ஜூலை 5) முதல் மலேசியாவெங்கும் திரையீடு காண்கிறது.

கடந்த சில மாதங்களாக மலேசிய சினிமா ரசிர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த மலேசியத் திரைப்படம் ‘அச்சம் தவிர்’. நாடெங்கிலும் உள்ள சுமார் 40-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியீடு காணும் இந்தத் திரைப்படம் மலேசியா இரசிகர்களை வெகுவாகக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஎச்ஆர் வானொலியைச் சேர்ந்த உதயா, ஆனந்தா, கீதா, ரேவதி ஆகியோரோடு, நடிகர் கானா, விகடகவி மகேன், பாடகர் ரேபிட் மேக், ஆல்வின் மார்டின், குபேன் மகாதேவன், ஜெய், ஷாலு, அகிலா, ஷீஜே, சிகே, டேடி ஷேக் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை சிங்கப்பூர் இயக்குநர் எஸ்.எஸ்.விக்னேஸ்வரன் சுப்ரமணியம், மலேசிய இயக்குநர் கார்த்திக் ‌ஷாமலன் இருவரும் இணைந்து இயக்கியிருக்கின்றனர்.

இர்வின் முனிர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வர்மன் இளங்கோவன் இசையமைத்திருக்கிறார்.

கதை என்ன?

6 நண்பர்கள் அவர்களின் உயிர் நண்பனின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக 6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒன்று கூடுகின்றனர். மகிழ்ச்சியும், ஆரவாரமுமாக சாலைப் பயணமாக திரங்கானு மாநிலத்திற்குச் செல்கின்றனர்.

இந்நிலையில், அவர்கள் செல்லும் வாகனத்தில் கோளாறு ஏற்பட்டு நடுவழியில் நின்றுவிடவே அங்கே காட்டுப் பகுதியில் இருக்கும் வீடு ஒன்றில் தங்குகின்றனர். அதன் பின்னர் நடப்பவை அனைத்தும் முதுகுத் தண்டினை உறையச் செய்யும் அளவிற்கு பயமும், விறுவிறுப்பும் கொண்ட திரைப்படமாக அச்சம் தவிர் உருவாகியிருக்கிறது.

இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகும் இத்திரைப்படத்தை கீழ்காணும் 6 காரணங்களுக்காக ரசிகர்கள் கட்டாயம் திரையரங்கில் சென்று பார்க்க வேண்டும்:

1. இத்தனை வருடங்களாக டிஎச்ஆர் வானொலியில் தங்களது அற்புதமான குரல் வளத்தாலும், துடிப்பான பேச்சாற்றலாலும் இரசிகர்களை மகிழ்வித்து வந்த முன்னணி வானொலி அறிவிப்பாளர்கள் எப்படித் திரையில் நடிக்கிறார்கள் என்பதை இந்தப் படத்தின் மூலமாக கண்டு இரசிக்கலாம்.

2. மனதிற்கு இதமான கலகலப்பான காமெடிக் காட்சிகளும், இருக்கையின் விளிம்பிற்கு வரும் அளவிற்கு பரபரப்பான திருப்பங்களும் நிறைந்த படம்.

3. ஒரு முக்கியமான சமூகக் கருத்தைத் தாங்கிய ஒரு திரைப்படம். மலேசியர்களுக்கு மட்டுமல்லாமல் உலக அளவில் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு கருத்து இத்திரைப்படத்தில் உள்ளது.

4. வர்மன் இளங்கோவனின் இசையில் இன்றைய காலத்திற்கு ஏற்ப துள்ளலான பாடல்களும், நகங்களைக் கடிக்கும் அளவிற்குப் விறுவிறுப்பான பின்னணி இசையும் இத்திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது.

5. திறமையான இளம் கலைஞர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் இத்திரைப்படத்தில் பணியாற்றியிருக்கின்றனர்.

6. அனைத்துலக அளவில் வெளியீடு செய்யும் அளவிற்கு காட்சிகளின் தரமும், தொழில்நுட்ப ரீதியில் மக்களைக் கவர்ந்திழுக்கும் வகையிலான ஒலி, ஒளி சேர்ப்புகளும் படத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

மொத்தத்தில், மலேசிய ரசிகர்களை திரையரங்குகளில் பார்க்கத் தவற விடக்கூடாத ஒரு படமாக ‘அச்சம் தவிர்’ உருவாகியிருக்கிறது. இன்று முதல் உங்கள் அபிமான திரையரங்குகளில் ‘அச்சம் தவிர்’ திரைப்படத்தைக் கண்டு களிக்கலாம்.

Comments