
புத்ரா ஜெயா – இன்றுடன் சேர்த்து மூன்று நாட்களாக ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரிக்கப்பட்டு வந்த ரிசா அசிஸ் இன்று வியாழக்கிழமை விசாரணைகளை முடித்துக் கொண்டு மாலை 6.40 மணியளவில் புத்ரா ஜெயாவில் உள்ள ஊழல் தடுப்பு ஆணையத்திலிருந்து வெளியேறினார்.
ரிசா அசிஸ் நஜிப் துணைவியார் ரோஸ்மா மன்சோரின் முதல் கணவர் மகன் ஆவார்.
செவ்வாய்க்கிழமை (ஜூலை 4) முதற்கொண்டு ரிசா அசிஸ் புத்ரா ஜெயாவில் உள்ள மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் 1எம்டிபி தொடர்பில் தனது வாக்குமூலத்தை வழங்கி வருகிறார்.
ரிசா ஹாலிவுட் படத் தயாரிப்பாளரும் ஆவார். இவர் ரெட் கிரானைட் பிக்சர்ஸ் (Red Granite Pictures) என்ற ஆங்கில படத் தயாரிப்பு நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார்.
இந்த நிறுவனம்தான் ‘தெ வோல்ப் ஆப் வால் ஸ்ட்ரீட்’ என்ற புகழ்பெற்ற ஆங்கிலப் படத்தை, லியார்னாடோ டி காப்பிரோவைக் கதாநாயகனாகக் கொண்டு தயாரித்தது.
1எம்டிபியில் இருந்து பெறப்பட்ட பணத்தைக் கொண்டுதான் ரெட் கிரானைட் நிறுவனம் ஆங்கிலப் படத் தயாரிப்பில் முதலீடு செய்தது என்பதுதான் ரிசா அசிஸ் மீதான விசாரணைக்கான அடிப்படையாகும்.