Home நாடு போராட்டத்தில் உதித்த நெகிரியின் அரசியல் முகம் – அருள்குமார் (நேர்காணல்-1)

போராட்டத்தில் உதித்த நெகிரியின் அரசியல் முகம் – அருள்குமார் (நேர்காணல்-1)

1376
0
SHARE
Ad

சிரம்பான் – நடந்து முடிந்த 14-வது பொதுத் தேர்தல், இதுவரையில் இலை மறை காயாகவும், பின்னணியிலும் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த பல எதிர்க்கட்சி இந்தியத் தலைவர்களை அடையாளம் கண்டு முன்னணிக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

அவர்களில் ஒருவர்தான் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் – ஆட்சிக் குழு உறுப்பினர் – ஜசெகவைச் சேர்ந்த அருள்குமார் ஜம்புநாதன்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி ஆட்சியைப் பிடிக்க, அங்கு பினாங்கு மாநிலத்திற்கு அடுத்து இரண்டாவது மாநிலமாக இரண்டு இந்திய ஆட்சிக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

அந்த இருவரில் ஒருவர்தான் சிரம்பான் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் – நீலாய் சட்டமன்றத்தின் உறுப்பினர் அருள்குமார்.

2013 பொதுத் தேர்தலிலும் அவர் இதே நீலாய் சட்டமன்றத்தில் போட்டியிட்டு மசீச-தேசிய முன்னணி வேட்பாளரை 4,047 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். எனினும் நெகிரி மாநிலத்தில் தேசிய முன்னணி ஆட்சியே தொடர்ந்த காரணத்தால், அருள்குமார் அப்போது அவ்வளவாக அறியப்படவில்லை.

2018 பொதுத் தேர்தலில் அருள்குமார் பெற்ற வாக்கு விவரங்கள்

மீண்டும் 2018 பொதுத் தேர்தலில் ஜசெக சார்பாக நீலாய் சட்டமன்றத்தில் நிறுத்தப்பட்ட அருள்குமார், இந்த முறை 9,825 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.கடந்த தவணையில் தனது தொகுதி வாக்காளர்களுக்கு வழங்கிய சேவைகள், உழைப்பு காரணமாகவும், பக்காத்தான் அலை காரணமாகவும் இந்த முறை அவரது வாக்கு வித்தியாசம் இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது.

தொடர்ந்து நெகிரியில் பக்காத்தான் கூட்டணி ஆட்சி அமைய – அந்த வெற்றியில் இந்தியர்களின் பங்களிப்பை உணர்ந்து 2 ஆட்சிக் குழு உறுப்பினர்கள் இந்திய சமூகத்திற்கு ஒதுக்கப்பட – அருள்குமாரும் ஆட்சிக் குழு உறுப்பினராகியுள்ளார்.

மற்றொரு ஆட்சிக் குழு உறுப்பினர் தம்பின் நாடாளுமன்றத்தின் கீழ் வரும் ரெப்பா சட்டமன்ற உறுப்பினர் வீரப்பன் சுப்பிரமணியம்.

இருவருமே ஜசெக கட்சியின் பிரதிநிதிகள்!

யார் இந்த அருள் குமார்?

சரி! யார் இந்த அருள் குமார்? பின்னணி என்ன? ஒரு நேர்காணலின் மூலம் அறிந்து கொள்ள ஒருநாள் சிரம்பான் நோக்கிப் புறப்பட்டோம்.

எளிமையான – ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் இல்லாத – தனது ஆட்சிக் குழு உறுப்பினருக்கான அலுவலகத்தில் இருந்து – தனது அரசியல் ஈடுபாடு – ஆட்சிக் குழு உறுப்பினராக தனக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்புகள் – தனது எதிர்காலத் திட்டங்கள் ஆகியவை குறித்து உற்சாகமாகப் பேசத் தொடங்கினார் அருள்குமார்.

“என்னை ஹிண்ட்ராப் போராட்டத்தில் உதித்த போராளிகளில் ஒருவனாகக் கூறலாம். நெகிரி மாநிலத்தின் கெமஞ்சே வட்டாரத்தைப் பூர்வீகமாக் கொண்ட நான் பத்தாங் மலாக்கா தமிழ்ப் பள்ளி மாணவனாக கல்வி வாழ்க்கையைத் தொடங்கினேன். பின்னர் புத்ரா பல்கலைக் கழகத்தில் வணிக நிர்வாகம் படித்து விட்டு 2013 பொதுத் தேர்தல் வரை குபு தமிழ்ப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தேன். 2007-இல் வெடித்த ஹிண்ட்ராப் போராட்டங்கள் என்னையும் சமூக, அரசியல் துறைகளில் ஈடுபாடு காட்டத் தூண்டியது. அந்தக் காலகட்டத்தில் தீவிரமாக சமூகக் கண்ணோட்டத்தோடு இயங்கிய எனக்கு ஜசெக தலைவர்களில் ஒருவரான அந்தோணி லோக் (தற்போது சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர், போக்குவரத்து அமைச்சர்), சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் ஆகியோரின் அறிமுகமும் பழக்கமும் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளில் ஜசெகவின் கட்டமைப்பு, கொள்கைகள், அந்தக் கட்சியில் அமைந்த நண்பர்கள் ஆகியோர் மூலமாக ஈர்க்கப்பட்டு, ஒரு சாதாரண உறுப்பினராக 2007-இல் சேர்ந்தேன்” என தனது அரசியல் பிரவேசத்தை விவரிக்கிறார் அருள்குமார்.

தொடர்ந்து அருள்குமார் ஜசெகவில் காட்டிய ஈடுபாடும், உழைப்பும் மற்ற மூத்த தலைவர்களை அவரை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தது. சில மாநில அளவிலான கட்சிப் பொறுப்புகளும் அவருக்கு வழங்கப்பட்டன.

கால ஓட்டத்தில் 2013 பொதுத் தேர்தலில் நீலாய் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட, ஆசிரியர் தொழிலில் இருந்து விலகி, தீவிர நேரடி அரசியலில் குதித்தார் அருள்குமார்.

அரசியல் அவரைக் கைவிட்டு விடவில்லை. அவரது போராட்டத்தை அறிந்திருந்த மக்களும் அவரைக் கைவிட்டு விடவில்லை.

2013-இல் நீலாய் சட்டமன்றத் தொகுதியில் வென்று நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தில் காலடி எடுத்து வைத்தார் அருள்குமார்!

-இரா.முத்தரசன்

அடுத்து: (நேர்காணலின் 2-ஆம் பாகம்)

  • ஆட்சிக் குழு உறுப்பினராக பணிகள் என்ன?
  • நெகிரி மாநிலத்தில் முதன் முதலாக அமைக்கப்பட்ட முஸ்லீம் அல்லாதார் விவகாரப் பிரிவின் பொறுப்பாளராக என்ன திட்டங்கள்?

தொடர்புடைய கட்டுரைகள்:

அருள்குமார் நேர்காணலின் காணொளி வடிவம்:

நெகிரி ஆட்சிக் குழு உறுப்பினர் அருள்குமார் நேர்காணல் (காணொளி)