Home நாடு அனைத்துலகப் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதிக்கிறது மாசாய் தமிழ்ப் பள்ளி

அனைத்துலகப் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதிக்கிறது மாசாய் தமிழ்ப் பள்ளி

1171
0
SHARE
Ad

கோலாலம்பூர் – புறப்பாட நடவடிக்கைகளில் நாட்டிலேயே முன்னணி வகிக்கும் பள்ளிகளில் ஒன்றாகத் திகழ்கின்றது ஜோகூரிலுள்ள மாசாய் தமிழ்ப் பள்ளி.

தமிழ்ப் பள்ளிகளுக்கு இடையில் மட்டுமின்றி மற்ற தேசிய நிலைப் பள்ளிகளோடு ஒப்பிடும் போதும் குறிப்பிடத்தக்க சாதனைகளை இந்தப் பள்ளி புரிந்து வருகிறது.

கடந்த மே மாத இறுதியில் ஹாங்காங்கில் நடைபெற்ற அனைத்துலக ஆங்கில நாடகப் போட்டியில் இரண்டு விருதுகளைப் பெற்ற மாசாய் தமிழ்ப் பள்ளி, கடந்த ஜூன் 29 மற்றும் 30-ஆம் தேதிகளில் கோலாலம்பூரில் நடைபெற்ற அனைத்துலக அறிவியல் நாடகப் போட்டிக்கான தேர்வுப் போட்டிகளில் மலேசியாவைப் பிரதிநிதிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்தத் தேர்வுப் போட்டிகளுக்கான இறுதிச் சுற்றில் தேசியப் பள்ளிகளோடு இரண்டு தமிழ்ப் பள்ளிகள் பங்கு பெற்றன. மொத்தம் 8 பள்ளிகள் பங்கு பெற்ற இந்தப் போட்டியில் மாசாய் தமிழ்ப் பள்ளியோடு, தாமான் பெர்மாத்தா தமிழ்ப் பள்ளியும் இந்த இறுதிச் சுற்று தேர்வுப் போட்டிகளில் பங்கு கொண்டது.

இந்தத் தேர்வுப் போட்டியில் மாசாய் தமிழ்ப் பள்ளி முதலாவதாகவும், இரண்டாவதாக ஸ்ரீ பெட்டாலிங் தேசியப் பள்ளியும் வெற்றி பெற்றன.

எதிர்வரும் ஜூலை 12 முதல் 15-ஆம் தேதி வரை கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் அனைத்துலக அறிவியல் நாடகப் போட்டியில் இந்த இரு குழுக்களும் மலேசியாவைப் பிரதிநிதித்து பங்கு கொள்ளும்.

மொத்தம் 7 நாடுகள் இந்த அனைத்துலக நாடகப் போட்டியில் பங்கு பெறுகின்றன. மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், சீனா, புருணை, தாய்லாந்து, நைஜீரியா ஆகியவையே அந்த 7 நாடுகளாகும்.

இந்தப் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதிக்கப் போகும் இரண்டு பள்ளிகளில் ஒன்றாக மாசாய் தமிழ்ப் பள்ளி தேர்வாகி சாதனை புரிந்துள்ளது.