டர்பன், மார்ச் 29- ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கான ஆதரவைக் கூட்டணிக் கட்சிகள் திரும்ப பெற்றாலும் அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும் என்று பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் நாடு திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு முன் கூட்டியே தேர்தல் வரும் என்பதை மறுத்த பிரதமர், தமது அரசு முழு ஆட்சிக்காலத்தையும் நிறைவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
சமாஜ்வாதிக் கட்சி மத்திய அரசுக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
கூட்டணிக் காட்சிகளில் பிரச்சினை இருப்பதை ஒப்புக் கொண்ட பிரதமர் இந்த நிர்பந்தங்களுக்காக சீர்திருத்த நடவடிக்கைகளைக் கைவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது முறையாக பிரதமர் பதவி ஏற்பீர்களா என பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு , சோனியாகாந்தி வாய்ப்பு அளித்தால் மீண்டும் பிரதமர் பதவிக்கு வருவேன் என்றும் , ஆனால் அது குறித்து நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகே முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமர் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து வரும் நிலையில் பிரதமரின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.