Home நாடு 14-வது நாடாளுமன்றத்தில் வெளியேற்றப்படும் முதல் உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங்

14-வது நாடாளுமன்றத்தில் வெளியேற்றப்படும் முதல் உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங்

1559
0
SHARE
Ad
கோலாலம்பூர் – தனது சகோதரர் கோபிந்த் சிங் டியோ அமைச்சராக அமர்ந்திருக்கும் நாடாளுமன்ற அவையில்,புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங் 14-வது நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் வெளியேற்றப்படும் முதல் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களவைத் தலைவரால் வெளியேற்றப்பட்ட காட்சி நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அரங்கேறியது.
2009-ஆம் ஆண்டு வாக்கில் தள்ளுவண்டியில் இருந்த தனது தந்தையார் கர்ப்பால் சிங்கை சூழ்ந்து கொண்டு சில அம்னோ உறுப்பினர்கள் தாக்க முற்பட்ட சம்பவத்தை தனது நாடாளுமன்ற உரையில் விவரித்த ராம் கர்ப்பால் அம்னோவினர் குண்டர்கள் (கேங்ஸ்டர்ஸ்) எனக் கூறினார்.
அந்த வார்த்தைகள் நாடாளுமன்ற நடைமுறைக்கு ஒவ்வாத வார்த்தைகள் என்று கூறி அவற்றை மீட்டுக் கொள்ளுமாறு மக்களவைத் தலைவர் முகமட் அரிப் கேட்டுக் கொண்டும் ராம் கர்ப்பால் மறுத்ததால் அவர் வெளியேற்றப்பட்டார்.
இதே கேங்ஸ்டர் என்ற வார்த்தையை தேசிய முன்னணி வேட்பாளர் பங் மொக்தாரும் பக்காத்தான் உறுப்பினர்களை நோக்கிப் பயன்படுத்தினார். எனினும் மக்களவைத் தலைவர் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து அந்த வார்த்தைகளை பங் மொக்தார் மீட்டுக் கொண்டதால் நாடாளுமன்ற அவையில் தொடர்ந்து அமர்ந்திருக்க அனுமதிக்கப்பட்டார்.
இதனால் சுமார் இரண்டு மணி நேரம் நாடாளுமன்ற அவையில் அமளி துமளிகள் தொடர்ந்தன. இந்த சம்பவங்களைத் தொடர்ந்து 14-வது நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அவையிலிருந்து வெளியேற்றப்படும் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ‘பெருமையை’ ராம் கர்ப்பால் சிங் திகழ்கிறார்.