இஸ்தான்புல் – துருக்கியில் தனது முதுகுத் தண்டுப் பிரச்சனைக்காக சிறிய அளவிலான அறுவைச் சிகிச்சையையும், பின்னர் தனது தோள்பட்டை அறுவைச் சிகிச்சையையும் முடித்துக் கொண்டுள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தற்போது துருக்கி, இஸ்தான்புல் நகரில் ஓய்வெடுத்து வருகிறார். துருக்கிய அதிபர் எர்டோகன் தனது துணைவியாருடன் அவரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இதற்கிடையில் காணொளி வாயிலாக அஸ்ட்ரோ அவானி தொலைக்காட்சிக்கு நேற்று சனிக்கிழமை நேர்காணல் ஒன்றை வழங்கிய அன்வார் இப்ராகிம், நீண்ட தூர விமானப் பயணம் செல்வதற்கு தனக்கு மருத்துவர்கள் தடை விதித்திருப்பதாகவும், அதன் காரணமாக தான் துருக்கியில் தங்கியிருந்து ஓய்வெடுக்க வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.
அவரது வலது தோள்பட்டையில் மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர், வலது கையில் துணிக்கட்டோடு அவர் காணப்படுகிறார்.
விரைவில் நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சியின் தேர்தல்களில் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாகவும் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.
(படம் – நன்றி: அன்வார் இப்ராகிம் முகநூல் பக்கம்)