சென்னை – திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி உடல் நலிவுற்றிருப்பதாக சென்னை காவேரி மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிக்கை விடுத்திருப்பதைத் தொடர்ந்து நேற்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக அமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் கோபாலபுரத்திலுள்ள கருணாநிதி இல்லத்திற்கு சென்று மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தனர்.
பின்னார் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய பன்னீர் செல்வம் “தலைவர் நலமுடன் இருக்கிறார். ஜெயலலிதா உடல் நலமில்லாமல் இருந்த போது அவர்கள் வந்து பார்த்தார்கள். எனவே, அரசியல் பண்பாடு கருதி நாங்கள் வந்து நலம் விசாரித்தோம்” எனக் கூறினார்.
கருணாநிதியைப் பார்க்க யாரும் நேரில் வரவேண்டாம் என மருத்துவர்கள் கேட்டுக் கொண்டாலும், தொடர்ந்து பல அரசியல் தலைவர்கள் கோபாலபுரம் சென்று மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வருகின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், கமல்ஹாசன், ஜி.கே.வாசன் ஆகியோரும் கோபாலபுரம் சென்று ஸ்டாலினைச் சந்தித்தனர்.
கருணாநிதிக்கு உணவு செலுத்தும் செயற்கை குழாய் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு சிறுநீரகப் பாதையில் தொற்று ஏற்பட்டுள்ளதன் காரணமாக அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. வீட்டிலேயே தொடர்ந்து சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவரது இல்லத்தை மருத்துவ வசதிகளோடு காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் மாற்றியமைத்துள்ளனர்.
முதுமை காரணமாக ஏற்பட்ட உடல் நலிவினால் அவருக்கு இந்தப் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கிறது. 24 மணி நேரமும் அவர் மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
கடந்த ஜூன் 3-ஆம் தேதி தனது 95-வது வயது பிறந்த நாளை கருணாநிதி கொண்டாடினார்.