Home நாடு பிகேஆர் தேர்தல்கள் சூடுபிடிக்கின்றன!

பிகேஆர் தேர்தல்கள் சூடுபிடிக்கின்றன!

1349
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அடுத்த மாதம் ஆகஸ்டில் நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சித் தேர்தல்களில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதை ரபிசி ரம்லி உறுதிப்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து அந்தக் கட்சியின் அனைத்து நிலைகளிலும் பரபரப்பும் விறுவிறுப்பும் ஏற்பட்டுள்ளது.

கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தற்போது துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் ஓய்வெடுத்து வருகிறார். எனவே, அவரிடமிருந்து கட்சித் தேர்தல்களுக்கான வேட்புமனுப் பாரத்தில்  அவரது கையெழுத்தைப் பெறுவதற்காக நாளை வெள்ளிக்கிழமை துருக்கி செல்கிறார் பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில்.

இதில் சுவாரசியம் என்னவென்றால் எந்தப் பதவிக்குப் போட்டியிடுவேன் என இதுவரையில் நடப்பு துணைத் தலைவர் அஸ்மின் அலி அறிவிக்கவில்லை. தனது துணைத்  தலைவர் பதவியை அஸ்மின் அலி தற்காப்பாரா அல்லது தேசியத் தலைவர் பதவிக்கே குறிவைத்து இறங்குவாரா என்ற எதிர்பார்ப்பும் பிகேஆர் உறுப்பினர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

எனினும், தனது அரசியல் குருவான அன்வாரை எதிர்த்து அஸ்மின் அலி களத்தில் இறங்க மாட்டார் என்றே கருதப்படுகிறது. மாறாக, தனது துணைத் தலைவர் பதவியை மீண்டும் தற்காத்துக் கொள்ளவே அஸ்மின் முனைப்பு காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே வேளையில் துணைத் தலைவர் போட்டியில் முக்கிய பிகேஆர் தலைவர்கள் யாரை ஆதரிப்பார்கள் என்பதும் மலேசிய அரசியலில் உன்னிப்பாகப் பார்க்கப்படுகிறது. அன்வார் குடும்பத்தினர் ரபிசி ரம்பலியை ஆதரிப்பார்கள் எனப் பரவலாகப் பேசப்படுகின்றது.

அடிமட்ட உறுப்பினர்களிடையே அஸ்மின் அலிக்கு ஆதரவு கணிசமாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை. எனினும் துன் மகாதீருடன் அவர் நெருக்கம் பாராட்டுவது அன்வாரின் தீவிர ஆதரவாளர்களிடையே கொஞ்சம் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது என்பதையும் மறுக்க முடியாது.

இத்தகைய சூழ்நிலையில் அஸ்மின் – ரபிசி இடையிலான போட்டி, மே 9 பொதுத் தேர்தலுக்கும், அம்னோ தேர்தலுக்கும் பின்னர் நடைபெறும் மிக முக்கியமான அரசியல் சம்பவமாகப் பார்க்கப்படுகிறது.

இரா.முத்தரசன்