கோலாலம்பூர் – லெபனான் நாட்டிலுள்ள ஒரு பிரபல நகை விற்பனை நிறுவனம் 14.79 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (மலேசிய ரிங்கிட் மதிப்பில் 59.831 மில்லியன்) நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் நகை வாங்கியதாகவும், அந்த நகைக்கான தொகையை இன்னும் செலுத்தவில்லை என்றும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. அந்த வழக்கை இரத்து செய்ய வேண்டுமென ரோஸ்மா சமர்ப்பித்திருக்கும் பதில் மனுவை எதிர்வரும் அக்டோபர் 11-ஆம் தேதி நீதிமன்றம் விசாரிக்கும்.
இந்தத் தொகைக்கு மொத்தம் 44 நகைகளை குளோபல் ராயல்டி டிரேடிங் என்ற அந்த நிறுவனம் ரோஸ்மாவுக்கு அனுப்பி வைத்ததாகவும், அந்த நகைகளை திருப்பித் தர வேண்டும் என்றும் அந்நிறுவனம் வழக்கு தொடுத்திருக்கிறது.
மே மாதத்தில் நஜிப் துன் ரசாக் தொடர்புடைய இல்லங்களில் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட ஆபரணங்களில் இந்த நகைகளும் அடங்கும். கடந்த ஜூன் 26-ஆம் தேதி அந்நிறுவனம் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கைப் பதிவு செய்திருக்கிறது.
எதிர்வரும் அக்டோபர் 11-ஆம் தேதி நடைபெறும் வழக்கு விசாரணையின்போது இந்த வழக்கில் மூன்றாம் தரப்பாக இணைய விண்ணப்பித்துள்ள (intervener) மலேசிய அரசாங்கத்தின் விண்ணப்பத்தையும் உயர்நீதிமன்ற ஆணையர் வோங் சீ லின் செவிமெடுப்பார்.
இந்தத் தகவல்களை ரோஸ்மாவின் வழக்கறிஞர் டத்தோ கீதன்ராம் தெரிவித்தார். இந்த வழக்கு நிர்வாகம் மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற்ற பின்னர் கீதன்ராம் பத்திரிக்கையாளர்களிடம் பேசினார்.
ரோஸ்மாவின் மற்றொரு வழக்கறிஞரான ராஜீவன், லெபனான் நிறுவனம் தொடுத்துள்ள இந்த வழக்கு சில மலேசிய சட்டங்களுக்கு முரணானது என்பதைக் காரணம் காட்டி வழக்கை இரத்து செய்யத் தாங்கள் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்தார்.