கோலாலம்பூர் – இரண்டு வருடங்களுக்கு முன்பு அம்பாங் தாமான் கோசாஸ் பகுதியில் உள்ள இரண்டு சூதாட்ட மையங்களில் அத்துமீறி நுழைந்ததற்காக குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கும் சுங்கை பெசார் அம்னோ தொகுதித் தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் முகமட் யூனுசுக்கு வழங்கப்பட்ட நீதிமன்றப் பிணைகளை (ஜாமீன்) இன்று அம்பாங் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் இரத்து செய்தது.
ஏற்கனவே ஜமால் முகமட் யூனுசுக்கு வழங்கப்பட்ட 3 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான இரண்டு பிணைகளை இரத்து செய்ய வேண்டுமென அரசு தரப்பு வழக்கறிஞர்கள் செய்திருந்த விண்ணப்பத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. ஜமால் மீண்டும் தப்பி ஓடிவிடுவார் என்ற அச்சத்தின் காரணமாக அவருக்கு பிணை வழங்கப்படுவது மறுக்கப்படுவதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து அம்பாங் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் ஜமாலின் பிணைகளை இரத்து செய்துள்ளதால், அவரது வழக்குகள் முடிவடையும் வரையில் அவர் சுங்கை பூலோ சிறைச்சாலையில் தொடர்ந்து இருந்து வருவார்.
ஜமால் யூனுஸ் மீதான வழக்குகளில் அவரது சார்பாக வழக்காடும் வழக்கறிஞர்களின் குழுவுக்கு தலைமையேற்றிருக்கும் டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லா, மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தின் உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரும் சீராய்வு மனுவை ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் தான் சமர்ப்பிக்கவிருப்பதாகத் தெரிவித்தார்.