கோலாலம்பூர் – மலேசிய அரசியல் இதுவரை சந்தித்திராத ஒரு புதிய சூழலில் இந்த ஆகஸ்ட் மாதம் காலடி எடுத்து வைக்கப் போகிறது. 60 ஆண்டுகளில் முதன் முறையாக மத்திய அரசாங்கத்தை பக்காத்தான் கூட்டணி கைப்பற்றியிருந்தாலும், செனட் எனப்படும் நாடாளுமன்ற மேலவையில் இன்னும் தேசிய முன்னணிதான் பெரும்பான்மை வகிக்கிறது.
அதைவிட முக்கியமாக, நாடாளுமன்ற மேலவையின் தலைவராக இருக்கும் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சியான மஇகாவின் தேசியத் தலைவராக இருக்கிறார். அவர் தொடர்ந்து அந்தப் பதவியில் நீடிப்பாரா என்பது கேள்விக் குறியாகியிருக்கும் நிலையில் பக்காத்தான் கூட்டணிக் கட்சியினர் அவர் பதவி விலக வேண்டும் என பகிரங்கமாக நெருக்குதல்கள் கொடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில், ஜிஎஸ்டியை இரத்து செய்து எஸ்.எஸ்.டி எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரியை எதிர்வரும் செப்டம்பர் 1 முதல் அறிமுகப்படுத்தும் சட்டத்தை நிதி அமைச்சர் லிம் குவான் எங் நேற்று செவ்வாய்க்கிழமை மக்களவையில் முன் மொழிந்துள்ளார்.
இந்த சட்டம் மக்களவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டு பின்னர் நாடாளுமன்ற மேலவைக்கு அனுப்பப்படும்போது அந்த அவையிலும் ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற அச்சம் பக்காத்தான் கூட்டணித் தலைவர்களிடையே ஏற்பட்டுள்ளது. காரணம், மேலவையில் இன்னும் பெரும்பான்மை செனட்டர்கள் தேசிய முன்னணியால் நியமிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒருமித்து எஸ்எஸ்டி வரிவிதிப்பு சட்டத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தால் அதனைத் தொடர்ந்து புதிய சட்ட சிக்கல் உருவாகலாம்.
இதனைக் கருத்தில் கொண்டுதான் நிதி அமைச்சர் லிம் குவான் எங் எஸ்எஸ்டி அமுலாக்கச் சட்டம் செனட்டர்களால் நிராகரிக்கப்பட்டால் அதனால் நாட்டில் நிதிச் சிக்கல் ஏற்படலாம் என எச்சரித்துள்ளார். பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு மக்கள் அளித்துள்ள ஆட்சி அதிகாரத்தைக் கருத்தில் கொண்டு, செனட்டர்கள் செயல்பட வேண்டும் என்றும் குவான் எங் கேட்டுக் கொண்டுள்ளார்.
எனவே, எஸ்எஸ்டி வரி அமுலாக்கச் சட்டம் நாடாளுமன்ற மேலவையில் கொண்டுவரப்படும்போது, நாட்டு மக்களின் விருப்பத்திற்கேற்ப, பக்காத்தான் கூட்டணிக்கு செனட்டர்கள் ஆதரவு தெரிவித்து புதிய அரசியல் பாதைக்கு வழி வகுப்பார்களா? அல்லது,
கட்சிக் கட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு எஸ்எஸ்டி அமுலாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதன் மூலம் நாட்டில் நிதிச் சிக்கல் சூழ்நிலையை உருவாக்குவார்களா? என்ற கேள்விகள் இப்போது முதற்கொண்டே கேட்கப்படுகின்றன.