சென்னை – (மலேசிய நேரம் பிற்பகல் 1.30 மணி நிலவரம்) கலைஞர் மு.கருணாநிதி எங்கு நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது குறித்த நீதிமன்றப் போராட்டம் மீது சென்னை உயர் நீதிமன்றம் சற்று முன்பு தனது தீர்ப்பை வழங்கியது. அதன்படி, கலைஞரை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி நடைபெற்று வந்த இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட குடும்பத்தினர் கண்ணீர் சிந்தி முடிவை வரவேற்றனர். இராஜாஜி அரங்கத்தில் திரண்டிருந்த மக்கள் ஆரவாரத்தோடு தீர்ப்பை வரவேற்றனர்.
இதுவரையில் அத்தனை பேர்களிடத்திலும் மண்டிக் கிடந்த சோக இருளின் ஊடே ஒவ்வொரு முகத்திலும் புன்னகைக் கீற்றுகள் தீர்ப்பைக் கேட்டதும் தென்பட்டன.
நேற்று திமுகவினரின் மனுவை அவசர மனுவாக ஏற்றுக் கொண்ட சென்னை நீதிமன்றம் இன்று காலை இந்திய நேரப்படி 8.30 மணிக்கு தனது விசாரணையைத் தொடக்கியது.
மெரினாவில் இறந்தவர்களின் நினைவிடங்கள் அமைக்கப்படுவது குறித்து ஏற்கனவே சில வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் போடப்பட்டுள்ளன. இன்று காலை நடைபெற்ற விசாரணையில் அந்த வழக்குகளைப் போட்ட டிராபிக் இராமசாமி, பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த கே.பாலு ஆகியோர் தங்களின் வழக்குகளை மீட்டுக் கொண்டனர்.
காமராஜர் நினைவிடம் அருகில் காந்தி மண்டபத்தில் 2 ஏக்கர் நிலம் கருணாநிதியின் நல்லடக்கத்திற்காகவும், நினைவிடம் அமைப்பதற்காகவும் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என்பதால், நீதிமன்றம் அந்த முடிவில் தலையிட முடியாது என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
எனினும் காரசார வாதப் பிரதிவாதங்களுக்குப் பின்னர் சென்னை உயர் நீதிமன்றம் மெரினாவில் கருணாநிதியின் நல்லடக்கத்திற்கு இடம் ஒதுக்க வேண்டுமென உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, தனது வாழ்நாள் முழுவதும் போராளியாகத் திகழ்ந்த கலைஞர் இறந்த பின்னரும், தான் எங்கு நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற போராட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யுமா என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை.