சென்னை – கலைஞர் மு.கருணாநிதியின் நல்லடக்கம் எங்கு நடைபெற வேண்டுமென இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் விசாரணையில் கிடைத்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதில்லை என தமிழக அரசு முடிவெடுத்துள்ளதைத் தொடர்ந்து, அண்ணா சதுக்கத்தில் கலைஞரை நல்லடக்கம் செய்ய முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நல்லடக்கம் செய்யப்பட வேண்டிய இடத்தில் மண்வாரி இயந்திர வாகனங்களைக் கொண்டு நல்லடக்கம் செய்யும் இடத்தில் குழிதோண்டும், சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.
இந்திய நேரப்படி மாலை 4.00 மணிக்கு இராஜாஜி அரங்கத்தில் இருந்து கலைஞரின் இறுதி ஊர்வலம் மெரினா நோக்கி செல்லத் தொடங்கும்.
இதற்கிடையில் இராஜாஜி அரங்கில் தொண்டர்களிடையே உரையாற்றிய மு.க.ஸ்டாலின் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் இங்கிருந்து கலைந்து சென்றால்தான் இறுதி ஊர்வலம் முறையாக நடைபெறும் என்றும் கேட்டுக் கொண்டார்.
கருணாநிதி நல்லுடலைத் தாங்கிச் செல்லவிருக்கும் சந்தனப் பேழையில் “ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்” என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது.