கோலாலம்பூர், மார்ச் 29 – இந்து மதத்தினரை இழிவு படுத்தும் வகையில் பேசியுள்ள பெர்காசா உதவித் தலைவர் சுல்கிப்ளி நோர்டின் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரி பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவர் என்.சுரேந்தரன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்து மதத்தினரையும், அவர்களது மதம் சார்ந்த நம்பிக்கைகளையும் இழிவு படுத்தும் வகையில் பேசியிருக்கும் சுல்கிப்ளி நோர்டின் மீது நீதித்துறையும், காவல்துறையும் குற்றப் பிரிவு 298A பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
சுல்கிப்ளி நோர்டின் ஒரு முன்னாள் பிகேஆர் கட்சி உறுப்பினர் என்பதுடன் கடந்த 2008 பொதுத் தேர்தலில் பிகேஆர் கட்சி சார்பாக கூலிம்-பண்டார் பாரு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கூலிம்-பண்டார் பாரு நாடாளுமன்ற உறுப்பினரான சுல்கிப்ளி நோர்டின் இந்து மத கடவுள்களின் உருவச் சிலைகளை அவமதிக்கும் வகையில் பேசியுள்ள அந்த ஒளி நாடா ‘Chandra Lawan Tetap Lawan’ என்ற பெயரில் சமூக வலைத் தளங்களான யு டியூப் (youtube) மற்றும் முகநூலில் நேற்று வெளியிடப்பட்டு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த 5 நிமிட ஒளி நாடாவில், இந்து கடவுள்களின் சிலைகளை விற்பனை செய்யும் ஒரு வியாபாரியின் கடைக்குள் வெள்ளம் புகுந்தது என்றும், அதை தடுக்க ஏன் ஒரு கடவுளும் வரவில்லை? அப்படியென்றால் அவை வெறும் கல்லா? என்பது போன்ற கேள்விகளை ஜூல்கிப்ளி கேட்பது போலவும் காட்சிகள் உள்ளன. ஆனால் அந்த ஒளி நாடா எப்போது எடுக்கப்பட்டது, உண்மையில் அதில் பேசியிருப்பது ஜூல்கிப்ளி தானா போன்ற விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.