சென்னை – கலைஞர் மு.கருணாநிதி மறைந்துவிட்டாலும், அவர் குறித்த பல நினைவுகள், சம்பவங்கள் இன்னும் பலராலும் ஊடகங்களாலும் பகிரப்பட்டு வருகின்றன.
கலைஞர் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்தது ‘முரசொலி’ நாளிதழ். 1950-ஆம் ஆண்டுகளில் திமுகவின் குரலாகவும் தனது எழுத்துப் படிவங்களுக்காக அவரே உருவாக்கிய களமாகவும் திகழ்ந்தது முரசொலி. தனது சொந்தக் கைப்பணத்தைப் போட்டு கருணாநிதி நடத்தி வந்த முரசொலி இதழில்தான் கலைஞரின் ஏராளமான எழுத்துப் படிவங்களும், அவரது ‘உடன்பிறப்பே’ கடிதங்களும் வெளியிடப்பட்டன.
இந்தப் பத்திரிக்கையை முன்னின்று நடத்தியவர் கலைஞரின் அக்காள் மகனான மாறன். அதன் காரணமாகவே, அவரது பெயரே முரசொலி மாறன் என உருமாற்றம் கண்டது.
கலைஞர் முதல்வரானதும், திமுகவின் அதிகாரபூர்வ ஏடாகவே உருவெடுத்தது முரசொலி. கலைஞர் முதல்வராக இருந்த காலங்களில் அந்தப் பத்திரிக்கையில் அவரது பங்களிப்பு குறைவாக இருக்கும். ஆனால், அவர் முதல்வராக இல்லாத காலங்களில் அவரது முழுமையான ஈடுபாடும், எழுத்துப் பங்களிப்பும் முரசொலி வழியாகவே நிகழும்.
ஒவ்வொரு நாளும் அந்தப் பத்திரிக்கையில் வெளிவரும் செய்திகள் கட்டுரைகள், கலைஞரின் ஒப்புதலுக்குப் பின்னரே வெளியிடப்படும். காலையில் அச்சடிக்கப்பட்ட முதல் பிரதி முதல் வேலையாக கலைஞரில் இல்லத்திற்கு அனுப்பப்பட்டு அவரும் அதனை முழுமையாகப் பார்த்துவிடுவார்.
ஆனால், கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி வெளிவந்த முரசொலிதான் கலைஞர் தன் கண்ணால் பார்க்காத முதல் முரசொலி. காரணம் சொல்லத் தேவையில்லை… அதில் தலைப்புச் செய்தியாக வந்திருந்ததே அவரது மறைவுச் செய்திதான்.
அந்த முரசொலி பத்திரிக்கை அவரது நல்லுடல் கிடத்தப்பட்டிருந்த கண்ணாடிப் பேழையில் அவரது தலைமாட்டில் வைக்கப்பட்டிருந்த உருக்கமான காட்சியை நம்மால் பார்க்க முடிந்தது.